கொரோனா 2-ஆவது அலையில் சென்னையில் மட்டும் 324 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணைநோய் உள்ள காவல்துறையினருக்கு பொதுமக்களுடன் அதிக தொடர்பு இல்லாத வகையில் எளிமையான பணியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.விபத்து, இறப்பு, தற்கொலை போன்ற வழக்குகளில் மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் செல்ல நேரும் பட்சத்தில் அவர்கள் முறையாக பி.பி.இ. கிட் அணிந்து சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன தணிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் முகக்கவசம், ஷீல்ட் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட காவலரோ அவரது குடும்பத்தினரோ கொரோனா கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு நிலைமையை பதிவு செய்து உதவிகளைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. தொற்று உறுதியானால் அண்ணா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினருக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டருக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்