கோவையில் ஒரு தம்பதி தங்களது நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்கு தேவையான மின்விசிறிகளை வாங்கிக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்துக்கொள்ள சென்றபோது, வெயில் கொடுமையால் கொரோனா நோயாளிகள் சந்திக்கும் சிரமங்களை கேள்விப்பட்டிருக்கின்றனர். உடனே சிறிதும் தயாங்காமல் தங்களது தங்க நகைகளை 2.20 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து அந்த பணத்தை கொண்டு 100 மின் விசிறிகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்த அவர்கள தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடவேண்டாம் எனக் கூறி மின்விசிறிகளை வழங்கியிருக்கின்றனர். நகைகளை அடகு வைத்து மின்விசிறிகளை தம்பதியினர் வாங்கியிருப்பதை அறிந்த ரவீந்திரன், அவர்கள் வசதிக்கு ஏற்ப சில மின்விசிறிகளை மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சிய மின்விசிறிகளை திரும்ப கொடுத்து நகைகளை மீட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் மின்விசிறிகள் நோயாளிகளுக்கு பயன்படவேண்டும் என்பதில் தம்பதி உறுதியாக இருந்துள்ளனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாக தம்பதியிடம் பேசியிருக்கிறார். பின்னர் அவர்களது அன்புக்கு பணிந்து தம்பதியிடமிருந்து மின்விசிறிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. சக மனிதனின் துன்பத்தை கண்டு மனமிறங்கி உதவிக்கரம் நீட்டிய தம்பதியின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்