ஓசூரில் 700 சவரன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் மூகண்டபள்ளி எம்எம் நகர் பகுதியில் வசிப்பவர் மாதையன். அரபு நாட்டில் உள்ள ஒரு கிரானைட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய நிலையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் காரியமங்களத்திற்கு சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அவர் வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த சுமார் 700 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் வீட்டில் வேலை செய்யும் பெண் வீட்டிற்கு வந்தபோது அங்கு வீட்டின் கதவு கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது முதலாளியான மாதையனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு தொழிலதிபர் மாதையன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். கொள்ளைபோன வீட்டிற்கு வந்த போலீசார் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பை கேட்டு வியந்து உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டி கங்காதர் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தகவல் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், 700 சரவன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக தகவல் வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்