‘பிரதமர் மோடியுடன் பேச பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்; ஆனால் அவர் மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக பதில் வந்தது’ என்று கூறியுள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ''மகாராஷ்டிராவுக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும். மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் கொண்டுவந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கிறது’’ என்றார்.
இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘’ஆக்சிஜன் விவகாரத்தில் மாநில அரசுகளின் தேவை தொடர்பாக மத்திய அரசு தினந்தோறும் பேசி வருகிறது. மகாராஷ்டிரா அரசு அதிகபட்ச அளவு ஆக்சிஜனை இதுவரை பெற்றிருக்கிறது. அப்படியிருந்தும் உத்தவ் தாக்கரேயின் இந்த மலிவான அரசியல் வேதனையும், அதிர்ச்சியையும் தருகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
தாக்கரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முதல்வர் தாக்கரேவை அணுகியதாகவும், நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவுக்கு போதுமான மற்றும் தடையின்றி மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும் 1,121 வென்டிலேட்டர்கள் கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்