சமூக வலைதளம் என்றாலே போட்டோ மற்றும் வீடியோவுக்கான தளங்கள்தான் நிறைய இருக்கின்றன. யூடியூப், டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்துத் தளங்களுமே போட்டோ அல்லது வீடியோ தொடர்பான தளங்களாகவே இருக்கின்றன. ட்விட்டர் எழுத்துத் தளமாக இருந்தாலும், அதிலும் அதிக அளவில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இந்த நிலையில் ஆடியோவுக்கென சமூக வலைதளங்கள் உருவாக்கினால் எப்படி இருக்கும்?
2020-ஆம் ஆண்டை ஆடியோ சமூக வலைதளங்களுக்கான ஆண்டு என்றுதான் கூற வேண்டும். கிளப்ஹவுஸ், டிஸ்கார்டு போன்ற ஆடியோவுக்கான சமூக வலைதளங்கள் 2020-ல்தான் வெளியாகின, மேலும் அந்தத் தளங்களுக்குப் பயனர்களின் வரவேற்பு அமோகம்.
ஆடியோவுக்கான சமூக வலைதளங்கள்:
கிளப் ஹவுஸ் தான் உலகளவில் பிரபலமான முதல் ஆடியோ வலைதளம். (கிளப்ஹவுஸ் பற்றி முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.) வீடியோ கேம் விளையாடுபவர்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் தளமாகவே இருந்தது டிஸ்கார்டு. ஆனால், அந்தத் தளம் கேமர்களுக்கான தளமாக மட்டுமல்லாமல், அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தும் வகையிலான வசதியைக் கொண்டு வந்தது. டிஸ்கார்டும் ஆடியோ வடிவில் பயனர்கள் கலந்துரையாடிக்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. 1.4 மில்லியன் பயனர்களுடன் இருந்த டிஸ்கார்டு, இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்திய பின் 6.7 மில்லியன் பயனர்கள் என்ற அளவில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை இரண்டும்தான் `சமூக வலைதளங்களுக்கான எதிர்காலம் ஆடியோதானா?’ என்ற கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறது.
புதிய முயற்சிகள்:
ஆடியோ வலைதளங்களுக்கான வரவேற்பைக் கண்ட பெரும் நிறுவனங்களும் புதிதாக ஆடியோ சேவைகளைத் தங்கள் தளங்களிலும் உருவாக்கத் தொடங்கின. இதுவரை ட்விட்டர், டெலிகிராம் மற்றும் லிங்க்ட் இன் ஆகிய தளங்கள் ஆடியோ வடிவிலான சேவைகளைத் தங்கள் தளங்களில் உருவாக்கியிருந்தன. தற்போது புதிய வரவாக ஃபேஸ்புக் ஹாட்லைன் சேவை இந்த வரிசையில் இணைந்துள்ளது. இவை மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு செயலிகளும் தளங்களும் இந்தப் புதிய சேவையில் தங்கள் தடம் பதிக்கப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களின் பரிணாம வளர்ச்சி:
ஒவ்வொரு காலத்திற்கேற்ப புதிய சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆர்குட் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபேஸ்புக்கின் வரவிற்கு முன்னர், அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளம் அதுதான். காலம் மாற மாற ஃபேஸ்புக்கிற்கும் ஆபத்துகள் வந்துகொண்டேதான் இருந்தது. ஃபேஸ்புக் பயன்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் போட்டோகளுக்கு எனத் தனி சமூக வலைதளம் உருவாக்கப்போகிறேன் என யாராவது சொல்லியிருந்தால் சிரிப்புதான் வந்திருக்கும். அதன் பின்னர்தான் இன்ஸ்டாகிராம் உருவானது. குறுஞ்செய்தித் தளமான வாட்ஸ்அப்பும் உருவானது. ஆனால், அதையெல்லாம் தனதாக்கிக்கொண்டதில்தான் ஃபேஸ்புக்கின் வெற்றியே அடங்கியிருந்தது. இன்று பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமிற்கு முன்னாள் பேஸ்புக் காணாமல்போயிருக்கக்கூட வாய்ப்புகள் இருந்தன. அதையெல்லாம், தனதாக்கிக்கொண்டு இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கம்தான், ஃபேஸ்புக்கிற்கு மாற்று அல்ல எனச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார் மார்க். 2006-ல், மைக்ரோ ப்ளாகிங் தளமாகத் தொடங்கப்பட்டது ட்விட்டர். அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், ட்விட்டர் இன்று இருக்கும் அளவு வளர்ச்சி அடையும் என்று.
அதே போன்ற ஒரு புதுவகையான தளம்தான் இப்போதும் உருவாகிக்கொண்டிருக்கிறது, ஆடியோ வடிவில். ஆனால், இப்போது போட்டி மிக அதிகமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் பல தளங்கள் உருவாகி நம் கண் முன்னே இருக்கின்றன. இவற்றில் எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பயனர்களின் விருப்பம் என்ன?
எந்தக் காலமாக இருந்தாலும் செவி வழி ஊடகங்களுக்கெனத் தனி இடம் பயனர்கள் மத்தியில் இருந்துவருகிறதுதான். ரேடியோ வடிவில் இருந்தது, பின்னர் அதனுடன் பாட்காஸ்ட் இணைந்தது. தற்போது இன்னும் கொஞ்சம் மேலே போய் ஆடியோ சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன. ரேடியோ மற்றும் பாட்காஸ்டுகளிடம் இல்லாத சிறப்பு இந்தச் சமூக வலைதளங்களில் என்ன என்ற கேள்வி எழும். மூன்று தளங்களுமே செவி வழி ஊடகம் என்ற ஒற்றுமை இருந்தாலும், மூன்றும் வேறு வேறு வகையில் இருக்கும். ரேடியோ தொலைக்காட்சிகளைப் போல, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சியைத்தான் கேட்க முடியும். பாட்காஸ்டுகள் நாம் விரும்பிய நேரத்தில் நமக்குப் பிடித்த தலைப்புகளில் இருக்கும் உள்ளடக்கங்களைக் கேட்க முடியும். தற்போது பரிணமித்திருக்கும் ஆடியோ தளங்கள் கேட்பது மட்டும் இன்றி கலந்துரையாடல்களை முதன்மையாக முன் வைக்கின்றன. மேலும், உலகம் முழுவதும் பரவிய கொரோனாவும் இதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எனக் கூறலாம்.
நாம் வெளியில் செல்லும்போது தினமும் புதிய மனிதர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருப்போம். அவர்களுடன் ஏற்படும் சிறு உரையாடல்கள்கூட நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, பேச்சுத் துணைக்கு ஒரு நபர் தேவையாக இருந்தது. என்னதான் நண்பர்களுடன் பேசினாலும், புதிய மனிதர்களுடனான உரையாடல்கள் முற்றிலும் குறைந்துவிட்டது. அந்தக் குறையை இந்தத் தளங்கள் போக்கியதுதான் இதன் வெற்றிக்கான காரணம் என்றுகூடச் சொல்லலாம். யாரென்று தெரியாதவர்களுடன் இந்தத் தளங்களின் மூலம் நமக்குப் பிடித்த தலைப்புகளில் உரையாடல்கள் மேற்கொள்ள முடியும். ரேடியோ மற்றும் பாட்காஸ்டுகளைப் போல ஒருவழிப் பாதையாக அல்லாமல் இருவழிப் பாதையாக இருப்பதுதான் மற்ற இரண்டில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.
Also Read: சமூக வலைதளங்களில் இது புதுசு... ஆடியோவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கிளப்ஹவுஸ்!
நீங்களும் இந்தத் தளங்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? உங்களுக்கான ஐந்து பரிந்துரைகள் கீழே. கிளப்ஹவுஸ்தான் இந்த வகையின் டிரெண்ட் செட்டர் என்றாலும், அது இன்னும் ஆண்ட்ராய்டு தளத்திற்கு உருவாக்கப்படவில்லை. மேலும், ஐஓஎஸ்-ஸிலும் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இல்லை. எனவே அதே போன்ற ஐந்து செயலிகளைப் பார்க்கலாம்.
1. ட்விட்டர் ஸ்பேஸஸ் (Twitter Spaces)
ட்விட்டர் இதனைத் தனது தளத்தில் ஒரு பகுதியாகவே வெளியிட்டுள்ளது. ட்விட்டர் செயலியிலேயே இதனைப் பயன்படுத்தலாம்.
2. லெகர் (Leher)
3. ரிஃப்பர் (Riffr)
4. ஸ்பூன் (Spoon)
5. டிஸ்கார்டு (Discord)
from விகடன்
0 கருத்துகள்