கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரம் கண்டுள்ள நிலையில், டெல்லியிலுள்ள மிகவும் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள் கூட உரிய ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் தங்களது மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்தி வருகின்றன.
டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை பல்வேறு தரப்பினரையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. பொதுவாக வட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை; ஆக்சிஜன் இல்லை என புகார்கள் எழுவதைப் பார்த்திருப்போம் ஆனால், தற்போதைய பேரிடர் சூழலில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கூட அதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையான போர்டிஸ் மருத்துவமனை, 'டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள எங்களது மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கூடுதல் ஆக்சிஜனை மட்டும் வைத்துதான் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம். நோயாளிகளின் உயிர் ஆபத்தில் இருக்கிறது' என கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், புதிய நோயாளிகள் யாரையும் தற்காலிகமாக அனுமதிக்கப் போவதில்லை எனவும் அந்த மருத்துவமனை கூறியுள்ளது.
அதேபோல வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள இந்திய முதுகுத்தண்டு மருத்துவ மையம், 'எங்களது மருத்துவமனையில் 160 நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இரவே வரவேண்டிய ஆக்சிஜன் இன்னும் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு மணி நேரம்தான் ஆக்சிஜன் மிச்சம் இருக்கக்கூடிய நிலையில் மிகவும் அபாயகரமான சூழல் நிலவுகிறது' என்று கூறியுள்ளது.
அதேபோல டெல்லியில் உள்ள பிரபலமான மூழ்சந்து மருத்துவமனையும், 'எங்கள் மருத்துவமனையில் 135 கோரோனோ நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர். உரிய ஆக்சிஜனை கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றால் எந்த உதவியும் கிடைக்கவில்லை' என கூறியுள்ளது.
இதனிடையே, டெல்லியில் ஐந்திற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம், கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அவ்வப்போது புதிய நோயாளிகளை அனுமதிப்பதை ரத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல புகழ்பெற்ற பாத்ரா மருத்துவமனை குழுமத்தின் தலைவர், 'எங்களது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. தயவுசெய்து அரசாங்கங்கள் எங்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் கடும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது' என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே டெல்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக 25 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சரோஜ் மருத்துவமனை, தரம்வீர் மருத்துவமனை என டெல்லியின் பிரபலமான மருத்துவமனைகள் அனைத்திலும் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகளை அனுமதிப்பதை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நோயாளிகளையும் சிகிச்சை அளிக்க முடியாமல் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகள் டிஸ்சார்ஜ் செய்து வருகின்றன.
அவ்வப்போது கிடைக்கும் குறைந்த அளவிலான ஆக்சிஜன் சப்ளையை வைத்துதான் இந்த மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. நிலைமை சீராகவில்லை என்றால் மிக மோசமான சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது, தலைநகர் டெல்லியில். அதேநேரத்தில் பல லட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் இந்த தனியார் மருத்துவமனைகள் தங்களது குடும்பங்களுக்கு என்று தனியாக ஆக்சிஜன் தயாரிப்புக் கருவிகளை உருவாக்காதது ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்