ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு தூத்துக்குடியில் நிலவும் ஆதரவும் எதிர்ப்பும்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 மே 28-ஆம் தேதி ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
தற்போது கொரோனோ பாதிப்புக் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்துதர அனுமதிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக அனுமதிக்கலாம் எனவும் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து கட்சிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமனம் செய்வதுடன் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்நிலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்குவதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது எனவும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்களது வழக்கமான உற்பத்தியை துவங்க தற்போது ஆக்சிஜன் தயாரித்துத்தர முன்வருவது அவர்கள் நடத்தும் சதி நாடகம் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கும் அரசியல் கட்சிகளின் முடிவு வரவேற்கத்தது எனவும், கொரோனோ பாதிப்பு நேரத்தில் ஆக்சிஜன் தட்டப்பாட்டை போக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாமாக முன்வந்ததும், ஆக்சிஜன் தயாரித்து தருவதற்கான முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்றுள்ளது, மகிழ்ச்சியளிப்பதாக ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவினை ஒரு மனதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கி ஆலையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்