தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரும் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது.
அப்போது, தமிழகத்தின் தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் அதன்பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதற்காக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்பார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதவிர காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்