Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சடலங்களை எரிக்க டோக்கன்... - கொரோனா பெருந்துயரின் உச்சத்தில் டெல்லி!

இடைவிடாது இரவும் பகலும் எரியும் சுடுகாடுகள்; எண்ணிக்கையை எழுதிவைக்க முடியாத அளவிற்கு குவியும் சடலங்கள்; எரிப்பதற்கு கட்டைகள் கூட கிடைக்காத அவலம்; கண்ணீரில் மிதக்கும் தலைநகரம்... கொரோனாவின் அதிதீவிர பாதிப்புகளால் தவித்து வரும் டெல்லி நிலவரம், உறுதியான மனம் படைத்தவர்களையும் உலுக்கும் வகையில் இருக்கிறது.

சாலைகள் எல்லாம் ஆம்புலன்ஸ் சத்தங்களாகவும், மருத்துவமனைகள் எல்லாம் ஆக்சிஜன் இல்லாத வெறும் கூடுகலாகவும் மாறியிருக்கிறது தலைநகர் டெல்லி. கொரோனாவின் இரண்டாவது அலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூறையாடி வரும் நிலையில், டெல்லியின் நிலைமையோ இப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பம் நிறைந்ததாக உள்ளது.

டெல்லியில் உள்ள மிகப்பெரிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்கூட ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவ, கிட்டத்தட்ட தங்களது நோயாளிகளை அவர்கள் நிற்கதியாக கைவிடும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை அனைவரும் கவலைகொள்ளச் செய்யும் வகையில் உள்ளது.

இதுவே தாங்க முடியாத வேதனை என்றால், இதைவிட வேதனை உயிரிழந்தவர்களை எரியூட்ட நடக்கும் அவலங்கள்தான் அதைக் காட்டிலும் பெருந்துயராக இருக்கிறது.

டெல்லியில் உள்ள பல மயானங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு 289 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்ற எண்ணிக்கையை தற்போது 400 ஆக உயர்த்தி இருக்கிறது தெற்கு டெல்லி மாநகராட்சி. நிறைய மின் மயானங்கள் தொடர்ந்து இயங்குவதால் அவை பழுதாகியுள்ளன.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள் எரிக்க பல மயானங்கள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருகின்றன. அதனால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது அன்பிற்கினியவர்களை தீக்கு கொடுக்க வரிசையில் காத்து நிற்கின்றனர் உறவினர்கள்.

ஹோட்டல்களில் டோக்கன்களை பெற்றுக்கொண்டு காத்திருப்பதுபோல சில இடங்களில் சடலங்களை எரிக்க டோக்கன் முறைகள் பின்பற்றப்படுவது கொடுமையின் உச்சம்.

புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள்கூட குழி தோண்டுவதற்கான ஆட்கள் கிடைக்காததன் காரணமாக சிதையை தீக்கு கொடுக்கின்றனர்.

ஆனாலும் உடல்களை ஏரிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. காரணம், எரிப்பதற்கு தேவையான கட்டைகள் கிடைப்பதில் கூட பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு இடுகாட்டில் இருக்கக்கூடிய கான்ட்ராக்டர்கள் ஒரு சடலத்தை எரிக்க ரூ.22,000 முதல் ரூ.25,000 வரை பணம் கேட்பதாக புகார்கள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்த பணத்தைக் கொடுத்தால் மட்டும்தான் இருப்பதற்கு தேவையான கட்டைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் கொடுப்பார்கள்.

இந்த பணத்தை கொடுக்க முடியாதவர்கள் ஏற்கனவே எரிந்து முடிந்திருக்கும் சடங்கங்களை எரிக்க பயன்படுத்தப்பட்ட கட்டைகளை கொண்டுவந்து சுடுகாட்டின் சுற்றுப்பகுதிகளில் எரிக்கக் கூடிய காட்சிகளை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

இன்னும் சில சுடுகாடுகளில் அதிக ஆட்கள் கூடுவதால் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதறாக உறவினர்களிடமிருந்து சடலங்களை மொத்தமாக வாங்கிக்கொண்டு, அவற்றை ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து எரிக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.

சில இடங்களில் ஈமச் சடங்குகளை செய்ய புரோகிதர்கள் என யாரும் முன்வராத நிலையில், தங்களுக்கு தெரிந்த மந்திரங்களை தாங்களே கண்ணீர் மல்க உச்சரித்துவிட்டு தீ மூட்டுகின்றனர்.

இப்படி எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், கதறல்களும் நிறைந்து காட்சியளிக்கிறது தலைநகர் டெல்லி முழுவதும். அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாத துன்பியல் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

இன்னும் சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கண்ணீர்க் கதைகள் வரும். கனக்கும் இதயம் தாங்குவது கடினமே!

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்