Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடருக்கு எதிர்ப்பு, வீரர்கள் விலகல்... - கொரோனா அச்சத்தால் கூடும் ஐபிஎல் சலசலப்புகள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டு வரும் சூழலில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐபிஎல் போட்டிகளில் இருந்து வீரர்கள் விலகி வருவதும் அதிகரித்து வருகிறது.

பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உற்சாகம் தந்து வருவதால், ஐபிஎல் போட்டியை எதிர்ப்பது சரியல்லை என்று ஒரு தரப்பு ஆதரவுக் குரல் தந்து வருகின்றனர். அதேநேரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து வருகின்றனர்; லட்சக்கணக்கானோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவே திணறுகிறது; சாமானிய மக்கள் மீண்டும் வாழ்வாதாரங்களுக்குப் போராடி வருகின்றனர். இத்தகைய சூழலில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் தேவைதானா என்ற எதிர்ப்புக் குரலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவின் ஒலிம்பிக் சாதனையாளர் அபினவ் பிந்த்ரே எழுதிய பத்தி ஒன்றில், "கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிர்வாகிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு வெளியே எந்நேரமும் ஒலித்துவரும் ஆம்புலன்ஸ் ஓசையெல்லாம் அவர்கள் காதுகளுக்கு விழவே இல்லையா?

image

நம் கொண்டாட்டங்களைச் சுருக்கிக்கொண்டு, சமூகத்துக்கு துளியாவது மதிப்பளிக்கக் கூடிய தருணத்தில் இருக்கிறோம். நாம் காட்டுகின்ற அன்பும் இரக்கமும்தான் மக்களையும் நாட்டையும் வலியிலிருந்து மீட்க உதவும். நாம் இக்கட்டான காலத்தில் இருக்கிறோம் என்பதை எல்லாருமே உணரவேண்டும்" என்று அபினவ் பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஐபிஎல் தொடருக்கே எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தொடரில் பங்கெடுத்துள்ள வீரர்கள் விலகி வருவதும் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம் இடம்பெறுகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆண்டிரே டை விலகுவதாக அறிவித்திருந்தார். ஏற்கெனவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரரான லியம் லிவிங்ஸ்டோன், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி நாடு திரும்பியிருந்தார். இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரும் விமான பயணிகளுக்கு தடை விதிக்கும் வகையில், இந்தியாவை 'ரெட்' பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பித்தபோதே இவர் சொந்த நாட்டிற்கு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிசர்ட்சன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இருவரும் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் நாடு திரும்புவதாக அந்த அணி நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா பரவல் மென்மேலும் அதிகரித்து வரும் சூழலில், பல வீரர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள்; அணிக்காக விளையாடி வரும் வீரர்களின் உறவினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை என அனைத்து வீரர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டாலும் கூட நாட்டில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் தங்களை திரும்பி வருமாறு கூறுவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான டேவிட் ஹசி கருத்து கூறியிருந்தார்.

image

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகளின் எண்ணிக்கையை அந்நாடு வெகுவாக சமீபத்தில் குறைத்து இருந்தது. இன்னும் அசாதாரண சூழல் உருவாகும் பட்சத்தில் சிக்கல் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பம் கொரோனாவிற்கு எதிராக போராடி வருவதாகவும், எனவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து தான் விலகி, குடும்பத்துடன் துணை நிற்கப்போவதாக கூறியிருந்ததும் கவனத்துக்குரியது.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்