டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வாருங்கள், இல்லையெனில் சாலைகளில் சடலங்கள் குவிந்து கிடக்கும் என்று டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஷோயிப் இக்பால் தெரிவித்தார்.
மோசமான கொரோனா பாதிப்பு நெருக்கடிகளால் டெல்லி போராடி வருகிறது. கொரோனா பாதிப்பால் டெல்லியில் நேற்றைய ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 395 ஆக இருந்த்து, இது நாட்டின் மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையாகும். மேலும் நேற்று 32,235 பேர் புதிதாக கொரோனா பாதிப்பிற்குள்ளாகினர். டெல்லி நகரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை ஏப்ரல் 28 அன்று 33,749 ஆக இருந்தது, அது ஏப்ரல் 30 அன்று 35,924 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் டெல்லியின் மத்திய மஹால் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ, ஷோயிப் இக்பால் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சியை கொண்டுவர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் “ எனது நெருங்கிய நண்பர் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். எவ்வளவு முயற்சி செய்தாலும், அவருக்கு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் அல்லது முக்கியமான மருந்துகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம். உதவி செய்யமுடியாத சூழலில் உள்ளோம். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது,
இதுபோன்ற நிலை தொடர்ந்தால், விரைவில் சாலைகளில் இறந்த உடல்கள் குவிந்து கிடக்கும். நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. தகவல் தொடர்பு சேனலும் இல்லை. கலந்துரையாடலும் இல்லை. எனவே டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இவரின் இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஆதரவளித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்