தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்குத் தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட மாநிலங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதை நீக்கி, ரெம்டெசிவிர் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய நலன் கருதி விரைந்து தடுப்பூசி தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டமைப்புரீதியிலும், செயல்படத்தகுந்த அளவிலும் தயாராக உள்ள இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் பயன்பாட்டுக்கு வந்தால், கொரோனா தடுப்பூசிகளை விரைந்து தயாரிக்க முடியும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்