இந்த ஆண்டு பருவமழை பொய்க்காது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். இதன்மூலம் கடந்த ஆண்டைப் போலவே கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் கைகொடுக்கும் வாய்ப்பு மிகுந்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருந்தால், அது விவசாயிகளுக்கு ஊக்கமாக மட்டுமின்றி, நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்பதும் நிச்சயம்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது, இந்தியாவின் தொழிற்சாலைகளில் உற்பத்தி தடைபட்டது. மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மட்டுமே நடைபெற்றது. இதனால் இந்தியப் பொருளாதாரம் சரிவு பாதையில் கிடுகிடுவென உருண்டு, முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை சந்தித்தது. அப்படி பொருளாதார வளர்ச்சி சரிந்தபோது, நாட்டுக்கு கை கொடுத்தது விவசாயத் துறை மட்டுமே.
தொழிற்சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தாக்கத்தையும் மீறி வேளாண் துறையில் உற்பத்தி கிட்டதட்ட 3 சதவீத வளர்ச்சியை சாதித்தது. இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம், பருவமழை குறையாமல் பொழிந்ததே. மேட்டூர் அணை பலமுறை முழு கொள்ளளவை எட்டியது மற்றும் குளம், குட்டைகள் இயற்கையின் நன்கொடையால் நிரம்பியது சென்ற வருட ஆறுதல்.
இந்த வருடமும் கொரோனா அலை காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் பருவமழை பொய்க்காது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். விவசாயிகளை பொறுத்தவரை இது மிகவும் ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தி என்பது மட்டுமல்லாமல், குடிநீர் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்பதால் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த வருடத்து தென்மேற்கு பருவமழை சராசரி அளவிலே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கும்முன், பல்வேறு கட்டங்களாக தனது கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது வழக்கம்.
ஏப்ரல் மாத கணிப்பில், தென்மேற்கு பருவமழை சராசரி அளவிலே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சராசரி அளவில் 96% முதல் 104 சதவிகிதம் வரை மழைப்பொழிவு, தென்மேற்கு பருவமழை காலத்தில் எதிர்பார்க்கலாம் என மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறித்த அடுத்த கணிப்பை மே மாத இறுதியில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்.
நீண்டகால சராசரியை, 96 விழுக்காடு மலை பொழிந்தால் இந்த வருடமும் வேளாண் துறைக்கு பாதிப்பு தவிர்க்கப்படும். ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தொடரும் தென்மேற்கு பருவமழை, இந்தியாவின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் உரம் விலை குறித்து புகார்கள் உள்ள நிலையில், வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர்ப்பாசனம் பாதிப்புக்கு உள்ளாகாது என்பதால் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் பயிர் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவமழை விழுக்காடு சராசரி அளவில் இருக்கும் என்பது இந்திய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்பதோடு, வேளாண் உற்பத்தி வளர்ச்சி அடைந்தால் உணவு தட்டுப்பாடு தவிர்க்கப்படும் என்பது சிறப்பு. உணவுப்பொருட்களின் விலை அதிகம் உயர்வதை கட்டுப்படுத்த முடியும் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் நிம்மதி அளிக்கும்.
கேரளாவில் தொடங்கி மேற்கு, வடமேற்கு திசையில் முன்னேறி தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு அளிக்கிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர பகுதிகள், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் வடகிழக்கு பருவமழை மூலம் மழைப்பொழிவு உண்டாகிறது. வங்காள விரிகுடா பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், வருடத்தின் இறுதி 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை இந்த பகுதிகளுக்கு மழைபொழிவை அளிக்கிறது.
- கணபதி சுப்ரமணியம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்