இந்தியாவின் ரீடெய்ல் பிரிவில் இருந்து வெளியேற 'சிட்டி பேங்க்' முடிவெடுத்திருக்கிறது. சர்வதேச அளவில் முக்கியமான சந்தையில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதால், பெரிய வளர்ச்சி இல்லாத 13 நாடுகளில் இருந்து வெளியேற அமெரிக்காவை சேர்ந்த சிட்டி வங்கி முடிவெடுத்திருக்கிறது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேஷியா, கொரியா, மலேசியா, பிலிபைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவெடுத்திருக்கிறது.
'சிட்டி பேங்க்' அமெரிக்காவில் முக்கியமான வங்கி. அமெரிக்கா தவிர ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரகம் மற்றும் லண்டன் ஆகியவை இந்த வங்கிக்கு முக்கியமான சந்தை. அதனால் முக்கியமான சந்தைகளில் மட்டுமே கவனம் செலுத்த சிட்டி வங்கி முடிவெடுத்திருக்கிறது.
"எங்களுடைய முதலீட்டையும் பணியாளர்களையும் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருக்க கூடிய வெல்த் மேனேஜ்மெண்ட் மற்றும் இன்ஸ்டியூஷனல் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறோம்' என சிட்டி பேங்க்கின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி ஜேன் ஃப்ரேசர் தெரிவித்திருக்கிறார். மேலும், "வெளியேற இருக்கும் சந்தையில் முக்கியமான போட்டியாளராக சிட்டி வங்கியால் வளர்ச்சி அடையமுடியவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம்தான் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பேற்ற சில மாதங்களில் சந்தையை மாற்றி அமைக்க முடிவெடுத்திருக்கிறார்.
இந்தியாவில் சேமிப்பு கணக்கு, கிரெடிட் கார்டடு, தனிநபர் கடன் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவெடுத்துள்ளது. 1902-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது சிட்டி பேங்க். 1985-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பர்சனல் பேங்கிங் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கிரெடிட் கார்டு பிரிவில் முன்னோடி என்று சிட்டி வங்கியை குறிப்பிடலாம்.
பாதிப்பு இல்லை
இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்தாலும் எப்போது என்பது குறித்து தெளிவான திட்டத்தை வங்கி வெளியிடவில்லை. அதேசமயம் வெளியேறுவது என்பது இந்தியப் பிரிவை மூடுகிறது என எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இந்திய ரீடெய்ல் பிரிவை வாங்குவதற்கு மாற்று நிறுவனத்தை தேடுவதாக சிட்டி பேங்க் அறிவித்திருக்கிறது.
அதனால், வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும். பணியாளர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. வங்கியை யார் வாங்குகிறார்கள், அதற்கான ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி தேவை. அதனால் தற்போதைய நிலைமையில் வாடிக்கையாளர் சேவை மற்றும் பணியாளர்களின் பணி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எந்த பிரச்னையும் இல்லை சிட்டி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அஷு குல்லார் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் சுமார் 35 கிளைகள் உள்ளன. பெரும்பாலான கிளைகள் பெரு நகங்களில் உள்ளன. 4,000 பணியாளர்கள் வேலையில் உள்ளனர். இந்த வங்கிக்கு 12 லட்சம் வங்கிக் கணக்குகளும், 22 லட்சம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்திய கிரெடிட் கார்ட் சந்தையில் 6 சதவீதம் அளவுக்கு சிட்டி பேங்க் வைத்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரெடிட் கார்ட் சந்தையில் 21 சதவீதம் அளவுக்கு சிட்டி வங்கி சந்தையை வைத்திருந்தது. ஆனால், இதர உள்நாட்டு வங்கி கிரெட்டிட் கார்டுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சிட்டி வங்கியால் வளர்ச்சி அடைய முடியவில்லை.
வங்கியின் வழக்கமான பணியாளர்கள் தவிர, இதர சர்வதேச சேவை மையமும் இந்தியாவின் பல நகரங்களில் செயல்படுகிறது. மும்பை, பூனே, சென்னை, பெங்களூரு மற்றும் குர்காவ் ஆகிய நகரங்களில் சிட்டி வங்கி சேவை பிரிவில் சுமார் 20,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
வெளிநாட்டு வங்கிகள்?
இந்தியாவில் நிதிச்சந்தை பிரிவு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் பலமாக இருந்தாலும் வங்கி மற்றும் நிதிச்சேவை பிரிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை அல்லது மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஜேபி மார்கன் நிறுவனம் என்பிஎப்சி அனுமதியை ரத்து செய்தது. பிஎன்பி பரிபா நிறுவனம் வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் இருந்து வெளியேறியது. டாய்ஷ் பேங்க் கிரெடிட் கார்ட் பிரிவில் இருந்து வெளியேறியது. அதேபோல பார்கிளேஸ் வங்கி மற்றும் பர்ஸ்ட் ராண்ட் வங்கி ஆகியவையும் வெளியேறின.
மியூச்சுவல் பண்ட் பிரிவை எடுத்துக்கொண்டால் பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறிவிட்டன.
பிடிலிட்டி, மார்கன் ஸ்டான்லி, தாய்வா, பைன் பிரிட்ஜ், ஐஎன்ஜி மியூச்சுவல் பண்ட், கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மார்கன் மற்றும் பிரின்ஸிபல் ஆகிய வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன.
தற்போது இந்தியாவில் இருக்கும் பெரிய வெளிநாட்டு வங்கி சிட்டி பேங்க் தான். இதனுடைய பேலன்ஸ்ஷூட் மதிப்பு ரூ.2.18 லட்சம் கோடி. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்டாண்டர்டு சார்டர்ட் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி. ஆகியவை உள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு வங்கி பிரிவில் முதல் இடத்தில் இருந்த சிட்டி பேங்க் வெளியேறியதால், அந்த சந்தையை மற்ற வெளிநாட்டு வங்கிகள் பிடிக்குமா என்பதுதான் சந்தையில் தற்போது இருக்கும் சவால்.
- வாசு கார்த்தி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்