'பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் கூட' என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கடந்த 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர்கள் இணைந்து 'பாரதிய ஜனதா கட்சி' என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பாஜக என்ற பெயரில் 1984-ஆம் ஆண்டு எதிர்கொண்ட முதல் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றது. ஆனால், அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தேசிய அளவில் பலமான கட்சியாக உருவெடுத்தது. இப்போது தனிப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் கட்சியாகவும் இந்தியாவில் அதிக மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சியாகவும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் கலந்து கொண்ட இந்த கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் காலை 10:30 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ‘’தனிநபரை விட கட்சி பெரியது; கட்சியை விட தேசம் பெரியது என்று நான் எப்போதும் நம்புகிறேன். பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி காலம் முதல் இன்றுவரை பா.ஜ.க.வின் பாரம்பரியம் பேணி பாதுகாக்கப்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயம். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். காஷ்மீருக்கு அரசியலமைப்பு உரிமையை வழங்கியுள்ளோம்.
பலர் பாஜகவை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு பதிலாக தேர்தலில் வெற்றி பெறும் ஒரு இயந்திரமாக கட்சியைப் பார்க்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் கூட'' என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்