தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே, அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்று (ஏப்ரல் 16) ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பாயங்களில் போதிய நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக சில ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ததற்கும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்