வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக ஏறிக்கொண்டே வருகிறது. எனவே வாக்களிக்க செல்லும்போது கட்டாயம் ’மாஸ்க்’ அணிந்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவின்போது கடைசி ஒருமணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்.
தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வீடு வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா என நடத்தப்படும் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 7ஆம் தேதிக்குப்பிறகு வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை நடத்தப்படும். அதேபோல் தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் போதுமான தடுப்பூசி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்புபோல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் தேர்தலுக்கு பிறகு முழு பொதுமுடக்கம் வரும் என்ற செய்தியை நம்பவேண்டாம்’’ என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்