இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அதன் மீது பல்வேறு கட்டங்களாக விசாரணையை நடத்தி வருகிறது. தடுப்பூசி விவகாரம் குறித்து கவனம் செலுத்தி வரும் உச்ச நீதிமன்றம், இதற்காக தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், 'இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும்' என அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை இதற்கு போதுமானதாக இருக்கும் என்றும், இருப்பினும் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் திட்டம் இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம், ரெட்டி லேப் நிறுவனம் ஆகியவையே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை என என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தற்பொழுது ஏற்பட்டிருப்பது தேசிய அளவிலான பிரச்னை. எனவே மத்திய அரசுதான் ஒட்டுமொத்த நாட்டிற்குமான தடுப்பூசியினை பெற்றுத்தர வேண்டும். மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மத்திய அரசை நம்பிதான் உள்ளன. அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் தருவோம் என நீங்கள்தான் உறுதி அளிக்க வேண்டும்" என கூறினர்.
கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் நாட்டின் பல பகுதிகளில் சிக்கல் இருக்கும் நிலையில், அதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இவற்றை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுங்கள் எனவும் மத்திய அரசை கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்