கொரோனா பரவல் காரணமாக சில தொகுதிகளில் 43 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படுவதால், முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும் எனத் தெரிகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன. இன்று 75 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சில தொகுதிகளில் 28 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 5 தொகுதிகளில் 28 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கவுண்டம்பாளையம், ஆவடி, மதுரவாயல், மாதவரம், கரூர் ஆகிய தொகுதிகளில் 20 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக அரவக்குறிச்சியில் 10 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதேபோல, 234 தொகுதிகளிலும், 13 சுற்றுகள் முதல் 43 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. பல்லாவரம், செங்கல்பட்டு தொகுதிகளில் 43 சுற்றுகளாகவும், தாம்பரம் தொகுதியில் 41 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. குறைந்தபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 13 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. அதிக சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தொகுதிகளின் இறுதி முடிவு தெரிவதற்கு இரவு அல்லது நள்ளிரவாகலாம் எனக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்