குமரி மாவட்ட மலையோர பகுதியில் ஒரே நாளில் 47 பழங்குடியின மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளை படகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் நிழந்துள்ளது.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார அமைந்துள்ளது தச்சமலை கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பலருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தது. இதனால் சிலர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருந்தை வாங்கிக்கொண்டு அவர்களது வீடுகளிலேயே இருந்துள்ளனர்.
அதில், ராமையன் (65), உஷா (40) மற்றும் தோட்டாமலை கிராமத்தை சேர்ந்த பூமாலை (65) ஆகியோருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் வாங்கிய மருந்தை சாப்பிட்டு அவர்களது வீடுகளிலேயே இருந்தபோது உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை எழுப்பியதன் பேரில் 27-ம் தேதி தச்சமலை கிராமத்திற்குச் சென்று சுகாதாரத்துறையினர் அங்கு வசிக்கும் மக்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், படகில் பேச்சிப்பாறை அணை வழியாக பேச்சிப்பாறைக்கு அழைத்துச் சென்று, நாகர்கோவில் குமாரசாமி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் உண்டு உறவிட மேல்நிலைப் பள்ளியில் கொரோனா கண்காணிப்பு மையம் அமைத்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்