Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காலில் விழவைக்கும் கலாசாரம் அருவருக்கவில்லையா?: ஒட்டனந்தல் சம்பவத்திற்கு கமல் கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தலில் பட்டியல் சமூகத்தினரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒட்டனந்தல் என்ற கிராமம் உள்ளது. அங்கு வசிக்கும் பட்டியலின மக்கள் கடந்த 12ஆம் தேதி கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், பொதுமுடக்க காலத்தில் திருவிழா நடத்த அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு பட்டியலின மக்கள் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, கூட்டப்பட்ட கிராம பஞ்சாயத்தில், விதிகளை மீறியதாக பட்டியலின மக்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில், மூன்று பேரை அழைத்து பிற சமூக மக்கள் முன்னிலையில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

image

இந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’’இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?

திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்