கேரளாவின் தேவசம்போர்டு எனப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் இருந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் நடவடிக்கை ஒன்றிற்கு வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர். அது, புதிய அமைச்சரவையில் கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக, பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதுதான் அந்த நடவடிக்கை.
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி தொடர்ந்து இராண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க திருவனந்தபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த விழாவில் இரண்டாம் முறையாக முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த அமைச்சர்களின் துறைகளை ஒதுக்கீடு செய்தது முதல்வர் பினராயி விஜயன்தான். அந்த வகையில், தனது அமைச்சரவையில் கேரள கோயில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக, பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமித்து இருக்கிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு தேவசம்போர்டு துறையையும் தாண்டி மாநில எஸ்.சி., எஸ்.டி துறையையும் ஒதுக்கியிருக்கிறார் பினராயி. மற்ற நியமனங்களை விட, பினராயி விஜயனின் இந்த நியமனம் கேரளாவை தாண்டியும், பொதுமக்கள், பல்வேறு தலைவர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. இதற்கு முன்பும் தேவசம்போர்டு துறைக்கு பட்டியிலனத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் பொறுப்பை வகித்திருந்தாலும், இந்த முறை புகழப்படுவதற்கு ராதாகிருஷ்ணனும் ஒரு காரணம்.
ராதாகிருஷ்ணன் கேரளத்தின் பக்தி நகரம் என அழைக்கப்படும் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். திருச்சூர் மாவட்டம் சேலக்கரை தொகுதியில் இருந்துதான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினராக இருந்துவரும் ராதாகிருஷ்ணன், கேரளா வர்மா கல்லூரியில் படிக்கும்போதே எஸ்.எஃப்.ஐ யூனிட் செயலாளராக அரசியலில் கால் பதித்தவர். பின்பு தனது சொந்த பகுதியான சேலக்கரை பகுதி செயலாளர், திருச்சூர் மாவட்டச் செயலாளர் என அரசியலில் படிப்படியாக உயர்ந்தவர்.
1996-ல் சேலக்கரை தொகுதியில் முதன்முறையாக எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டார். அதில் வெற்றி கிடைக்கவே, முதல்முறை சட்டமன்றத்தில் நுழைந்தபோதே அப்போதைய முதல்வர் இ.கே.நாயனாரின் அமைச்சரவையில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின நலம் மற்றும் இளைஞர்நல அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட அந்தப் பகுதியில் தவிர்க்க முடியாத தலைவராக உருமாறினார். இதன்காரணமாக 2001, 2006, 2011 என தொடர்ச்சியாக அதே தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அலங்கரித்தார். இதில் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றபோது சபாநாயகராக பதவியில் அமரவைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கட்சிப் பணிக்காக 2016 தேர்தலில் தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி இருந்தவரை, இந்தமுறை மீண்டும் கட்சித் தலைமை அவரை அழைத்து வந்தது. அந்தவகையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 39,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்க, இப்போது தேவசம்போர்டு அமைச்சராகி இருக்கிறார். அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு விவசாயி ராதாகிருஷ்ணன். சேலக்கரை பகுதியில் குத்தகைக்கு எடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில், இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களை விவசாயம் செய்துவருகிறார் அமைச்சர் ராதாகிருஷ்ணன்.
இப்படிப்பட்ட ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதையடுத்தே சீமானும், திருமாவளவனும் பினராயி விஜயனை பாராட்டியிருக்கிறார்கள். இதில் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், "கேரளாவில் ராதாகிருஷ்ணன் தேவசம்போர்டு (இந்து அறநிலையத்துறை) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் துணிச்சலை விசிக நெஞ்சார பாராட்டுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பி.ஆர்.பரமேஸ்வரன். இன்று கேரளாவில் ராதாகிருஷ்ணன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
- மலையரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்