Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"கடவுள்தான் எங்களை..." - கொரோனாவின் கோரப்பிடியில் மோடியின் வாரணாசி தொகுதி?

"பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமலேயே சடங்களை எரித்து வருகிறோம்" என்கிறார் மயானப் பணியாளர்; "ஓய்வின்றி ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன" என்று புலம்பித் தள்ளுகிறார், சடங்களை எரிக்க மரக்கட்டைகள் விற்கும் வியாபார்; "கோரோனா மரணங்கள் 'உண்மை'யில் அதிகம்" என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்... இவை அனைத்தும் பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியாக வாரணாசியின் கோவிட் பாதிப்பு நிலவரம்.

கடந்த வாரத்தில் பீகார் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததை, நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பல நாட்களாக நீரில் மிதந்திருந்த காரணத்தால், அந்த சடலங்கள் யாவும் அழுகிய நிலையில் இருந்ததாகவும், வழியில் அவை மிதந்திருந்த வேளையில் நாய்கள் சில அதை குதறியிருந்ததாகவும் அங்கிருந்த ஊடகங்கள் பதிவுசெய்தன.

பீகார் – உத்தரப் பிரதேசத்தின் எல்லையில்தான் இந்த சடலங்கள் யாவும் மிதந்தன என்பதால், சடலங்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவை இல்லை என உத்தரப் பிரதேச - பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். இங்கே சடலங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவை என்பதுதான் அவர்களின் பிரதான பிரச்னையே தவிர, ஏன் இப்படி சடலங்கள் ஆற்றில் மிதந்தன என்பதல்ல. காரணம், சடலங்கள் கங்கை ஆற்றில் மிதப்பது இவ்விரு மாநில மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பழக்கமான ஒன்றுதான். என்றாலும் இந்த முறை குவியல் குவியலாக சடலங்கள் கிடைத்துள்ளதுதால், சற்று அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

உ.பி. – பீகார் மாநிலங்கள் மட்டும்தான் என்றில்லை, வட இந்தியாவில் நிறைய இடங்களில் இப்படியான அவலநிலை இருக்கிறது. இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் இப்படியான நிலைதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாரணாசியில் கங்கை நதிப்பகுதியில் பாதி எரியூப்பட்ட சடலங்கள்கூட மிதப்பதாக செய்திகள் வெளியாகின்றன. வாரணாசியில் ராம்நகர் பகுதியில் ஏழு சடலங்கள் பாதி எரியூட்டப்பட்டு மிதந்ததாக 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி ஒன்று தெரிவித்திருந்தது. இதை ராம்நகர் காவல் நிலைய அலுவலர் வேத் ப்ரகாஷ் ராய் உறுதிபடுத்தவும் செய்திருக்கிறார். “மொத்தம் 7 சடலங்கள் இருந்தன. அவை, பாதி அழுகிய நிலையில் சப்ஜாத் என்ற கிராமத்தின் அருகில் கண்டறியப்பட்டன. அனைத்து சடலங்களையும் உரிய பாதுகாப்போடு அடக்கம் செய்திருக்கிறோம்” என அவர் பத்திரிகைகளிடம் கூறியுள்ளார்.

image

சப்ஜாத் கிராமத்துக்கு அடுத்து இருக்கும் டோம்ரி கிராமம், பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு நேரடியாக தத்தெடுக்கத்துக்கொண்ட கிராமம். சரி, மோடியின் நேரடி தொகுதி விவகாரத்துக்கு வருவோம். வாரணாசியில், ஏப்ரல் 1 முதல் மே 7 ம் தேதி வரை, அதிகாரபூர்வமாக 227 கொரோனா மரணங்கள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, கடந்த ஒரு வருடத்தில் அம்மாவட்டத்திலேயே 650 பேர்தான் இறந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், வாரணாசியின் மணிகர்னிகா கட் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 – ஏப்ரல் 23-க்கு  உட்பட்ட காலத்தில் மட்டும் ஏறத்தாழ 1,500 சடலங்கள் இறுதி சடங்குக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

வாரணாசியில் மொத்தம் 13 மயானங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஏப்ரல் 1 முதல் மே 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா மரணங்கள் 1,680-க்கு குறைவாக இருக்காது என்று கூறியுள்ளனர்.

வாரணாசியை பூர்விகமாக கொண்ட தகன சடங்குகள் செய்யும் ஒருவர், ’ஃபர்ஸ்ட் போஸ்ட்’  செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில், “ஏப்ரல் 8 முதல் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததை எங்களால் உணரமுடிந்தது. குறிப்பாக, ஏப்ரல் 17 – 21-க்கு உட்பட்ட நாள்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் வந்தன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கொரோனாவால் இறந்தோருடையது. நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல் வந்ததால், அந்த நேரத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

நான் இருந்த பகுதியை சேர்ந்த மயானத்தில், ஒரு நாளில் 15 சடலங்களைத்தான் மின்சாரம் வழியாக அடக்கம் செய்ய முடியும். அதனால் மீதமிருந்த அனைத்து சடலங்களையும் எரிக்கவே செய்தோம். இருந்தபோதிலும், எங்களிடம் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசமெல்லாம் எதுவுமில்லை. கடவுள்தான் எங்களை காத்தருளினார்” எனக் கூறியுள்ளார்.

அதிகப்படியான சடலங்கள் எரிக்கப்பட்டதால், அதை எரிக்க உதவிய மரக்கட்டைகள் தட்டுப்பாடு அங்கே நிலவி இருக்கின்றன. வாரணாசியை சேர்ந்த மூங்கில் வியாபாரி ஒருவர் பேசும்போது, “எங்களுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்விருக்காது. தொடர்ச்சியாக ஆர்டர்கள் வந்த வண்ணம் இருக்கும். எங்க பகுதியிலிருந்து எல்லா கடையிலுமே நிலைமை இதுதான்” எனக் கூறியிருந்தார்.

இவை மட்டுமன்றி, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கும் பொருளாதார ரீதியிலான சிக்கல்கள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இன்று (மே 17), வாரணாசியிலுள்ள 14 மருத்துவமனைகளுக்கு அதிக தொகை வசூலித்ததற்காக நோட்டிஸ் அனுப்பியுள்ளது அம்மாவட்ட நிர்வாகம்.

வாரணாசியில் இதுவரை 70,000-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 700-க்கு மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே கங்கை நதியுடனும் வாரணாசியுடனும் அங்கு வாழும் மக்களுடன் தனக்கு சிறந்த உறவு இருப்பதாக எத்தனையோ இடங்களில் குறிப்பிடுகிறார் மோடி. ஆனால், கொரோனா வைரஸ் மிக மோசமாக ஆகியிருக்கும் சூழலில், மோடி தொகுதிப் பக்கம் வரவே இல்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது.

தொடர்ச்சியான இந்தக் குற்றச்சாடுகள், வாரணாசியை மட்டுமன்றி இந்தியாவின் நிலையையே மிக மோசமாக படம்பிடித்து காட்டுவதாகவே இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்