Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முழு ஊரடங்கான நாளையும் ரேஷனில் கொரோனா நிவாரண நிதி பெறலாம் - தமிழக அரசு

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது. முழு முடக்கமான நாளையும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன், கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் நிவாரண நிதி வழங்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் , கூட்ட நெரிசலின்றி, நிவாரணம் வழங்குவதற்காக டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரணத் தொகையை பெற்றுச் செல்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தங்களது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தை பெறுகின்றனர். 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக 4 ஆயிரத்து 153 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்