Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'தடுப்பூசி நன்கொடை' திட்டம் - கொரோனாவை ஒழிக்க புதிய முன்னெடுப்பில் பஞ்சாப் அரசு!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும் வகையில் பஞ்சாப் அரசு ஆரம்பித்துள்ள 'தடுப்பூசி நன்கொடை' திட்டம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் இந்தப் புதிய முன்னெடுப்பு குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தீர்வு குறித்து மருத்துவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை ஒருமித்த குரலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மத்திய மாநில அரசுகள், மக்களை காக்க முயன்ற அளவு தடுப்பூசிகளை வாங்கி வருகின்றன. எனினும் நிதி பற்றாக்குறை போன்ற சூழல், தடுப்பூசி இயக்கத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை போக்கும் வகையில் பஞ்சாப் அரசு புதிய முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளது. அது 'தடுப்பூசி நன்கொடை' திட்டம்.

image

இந்த திட்டத்தின்படி, 18 - 44 வயதினருக்கு அரசு சார்பில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு தனிநபர்கள், நன்கொடை அளிக்கலாம். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் இந்தத் திட்டத்தின் மூலம் உதவலாம். இதற்காக பஞ்சாப் அரசு தனி வங்கிக் கணக்கை பொதுமக்கள் பார்வைக்கு அளித்துள்ளது. இந்த வங்கிக் கணக்கு தவிர பல்வேறு மாவட்ட அலுவலக இணையங்கள் மூலமாக நன்கொடை அளிக்க ஆன்லைன் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் நன்கொடையாளர்கள் தாங்கள் நன்கொடை அளிக்க விரும்பும் நபர்களின் விவரங்களை சொல்லி தங்கள் நன்கொடைகளை அளிக்கலாம்.

ஒரு தடுப்பூசிக்கு ஒருவர் எவ்வளவு நன்கொடை வழங்க வேண்டும்?

இரண்டு டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மாநில அரசு, ரூ.430 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்கிறது. இதையே நன்கொடையாளர்களிடம் இருந்தும் வசூலிக்கிறது அரசு. நன்கொடை அளிப்பவர் ஒரு தனிநபருக்கு ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.430 செலுத்த வேண்டும்.

தனிப்பட்ட முறையில், கோவாக்சின் ஒற்றை டோஸ் ரூ.1,000 க்கு விற்கப்படுகிறது. இதனால்தான் அரசு இப்படி நன்கொடை மூலம் பணமாக வாங்கி அதனை தங்கள் கொள்முதல் மூலம் தடுப்பூசி செலுத்த பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. எனினும் பஞ்சாப் அரசு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மட்டுமே நன்கொடை வசூலிக்கிறது. கோவிஷீல்டுக்காக பஞ்சாப் அரசு நன்கொடைகளை வாங்கவில்லை.

இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார்கள் பஞ்சாப் அரசு அதிகாரிகள். ''அதிகமான தொழிலதிபர்கள் தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உட்பட பிறருக்கான தடுப்பூசிகளுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக எங்களிடம் வருகிறார்கள். பல தொழிலதிபர்கள் தங்கள் சி.எஸ்.ஆர் நிதியை தடுப்பூசிகளை நன்கொடையாகப் பயன்படுத்துவதால் கிராமங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தடுப்பூசிக்கான நோடல் அதிகாரி விகாஸ் கார்க் என்பவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

image

முன்னதாக மொஹாலி துணை ஆணையர் ஒருவர், ஒரு முழு கிராமத்திற்கும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க என்ற இந்த திட்டத்தை முன்வைத்து தனது சகாக்கள் மற்றும் மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதன்படி, அவரும், அவரது ஐந்து சகாக்களும் மசோல் என்ற கிராம மக்களுக்காக பணம் திரட்டி, ரூ.1.78 லட்சம் நன்கொடையாக அளித்தனர். அவர்களின் முயற்சியால் தற்போது அந்த கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 'தடுப்பூசி நன்கொடை' திட்டம் மூலம் மொஹாலி மாவட்டத்தில் மட்டும் தடுப்பூசிகளுக்கான நன்கொடையாக ரூ .40 லட்சத்திற்கு மேல் வசூலிக்கப்பப்பட்டுள்ளது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

- தகவல் உறுதுணை: The Indian Express

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்