Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"செலவு செய்வது நாங்கள்தானே!'- தடுப்பூசி சான்றிதழிலில் மோடி படத்தை அகற்றிய சத்தீஸ்கர் அரசு

மாநில அரசே பணம் கொடுத்து வாங்குவதால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படத்தை அகற்றிவிட்டு, தங்கள் மாநில முதல்வர் படத்தை அச்சிடவுள்ளது சத்தீஸ்கர் அரசு.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவோருக்கு வழங்கப்படக் கூடிய சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவது பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில், மத்திய அரசு அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது.

இதற்கிடையில் மத்திய அரசால் போதுமான தடுப்பூசி சப்ளையை மாநில அரசுகளுக்கு வழங்க முடியாததன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

image

இதற்கு ஒரு படி மேலாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவினை மேற்கொள்ள கோவின் இணையதளத்தை மத்திய அரசு ஆரம்பித்தது போல 'சி ஜி டீக்கா' என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசு தனியாக இணையதளத்தை உருவாக்கி 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவை மேற்கொண்டு வருகிறது. இதில் பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு சத்தீஸ்கர் அரசு சார்பில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பொதுவாக தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை அகற்றிவிட்டு சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், 'யாருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டுமென்ற போட்டிபோட இது நேரமில்லை. இதன்மூலம் விளம்பரங்களை தேட முயற்சிக்கும் சத்தீஸ்கர் அரசு, உடனடியாக தங்களின் இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சட்டீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ, "18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நிதியினை மாநில அரசு செய்கிறது. மத்திய அரசு பணம் கொடுக்கும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்கும்பொழுது, மாநில அரசு செலவு செய்யும் சான்றிதழ்களில் முதல்வர் படம் ஏன் இருக்கக்கூடாது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து, அதற்குப் பிறகு எந்த தார்மிக அடிப்படையில் பிரதமர் மோடியின் படத்தை அதில் அச்சிட வேண்டும் என கேட்கிறார்கள் எனவும் அவர் வினவியுள்ளார்.

சத்தீஸ்கர் அரசு போலவே பிற மாநில அரசுகளும் தங்கள் மாநில முதல்வர்களின் புகைப்படங்களை சான்றிதழ்களில் வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கும் அதேநேரத்தில், தனியார் மருத்துவமனையில் எங்களது சொந்த பணத்தில் இருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் சான்றிதழ்களில் எங்களது புகைப்படத்தை அச்சிட்டு தருவீர்களா என மற்றொரு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர்.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்