மதுரையில், தினமும் 1200 முதல் 1500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. ஆகவே தொற்றை மாவட்டத்தில் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனொரு பகுதியாக, கடந்த சில தினங்களாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பலன், தற்போது கிடைத்துள்ளது. ஆம், மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் வழக்கம், கடந்த திங்கள்கிழமை முதல் மதுரையில் அமல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து இப்போதுவரை இளைஞர்கள் பலரும் ஆர்வமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு, மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு முகாமிலும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மதுரையில், 110 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் இருக்கின்றன. இவற்றில் 96 முகாம்கள், வழக்கமாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் - அரசு மருத்துவமனை போன்றவற்றில் இருக்கின்றன. இளைஞர்கள் அதிகளவில் தடுப்பூசி போட ஆர்வமாக முன்வருவதால், கூட்டம் கூடுவதை தவிர்க்க, கூடுதலாக 15 முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையங்களிலும் அதிக இளைஞர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட வந்திருப்பது, ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்கின்றனர். அதற்கான கட்டமைப்பு வசதிகளை, அரசு அடுத்தடுத்த கட்டமாக அதிகரித்தும் வருகின்றது. ஒருசில இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிலையையும் காணமுடிகிறது. அவர்களை, அங்கிருக்கும் அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை அறிவுரை கூறி ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், மக்கள் சுயசுகாதாரத்தை காக்க வேண்டுமென்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
மதுரையில், இதுவரை 3.15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அவர்களில், கடந்த திங்கட்கிழமைக்குப் பின், 18 - 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசிகள் 29,000 த்துக்கும் அதிகமென சொல்லப்படுகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும், 18 - 44 வயதுக்குட்பட்டவர்களில், 16,300 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிக மிக ஆரோக்கியமான விஷயமாக பாராட்டப்படுகிறது.
- கணேஷ்குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்