* கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 309 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை நலம் பெற்றோரின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 320ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 972ஆக அதிகரித்துள்ளது.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. 1966 முதல் 1968ஆம் ஆண்டு வரை ஐ.நா.மன்றத்தின் உதவி ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர். பேராசிரியராகவும் பணியாற்றிய மைதிலி சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழக மாநில குழு உறுப்பினராக இருந்தார். பின்னர் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் செயலாற்றினார்.
* கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
* கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு வரிச் சலுகை அளிப்பது பற்றி ஆராய மத்திய நிதியமைச்சகம் குழு அமைத்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான பொருட்களுக்கு வரி விலக்கு அல்லது வரிக் குறைப்பு குறித்து ஆய்வு செய்யும் இந்த குழுவில் 8 மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மாவை அமைப்பாளராக கொண்ட குழுவில் கேரளா, மகாராஷ்ட்ரா மாநில அமைச்சர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதற்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவுடன் நமச்சிவாயம் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
* புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவத்தில் அதிகாரியாக பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். திருமணமாகி ஒன்பது மாதங்களே ஆகியிருந்த, மேஜர் விபூதி சங்கர் தவுண்டியால் இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.
* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை, பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியாக எளிமையாக கொண்டாடுமாறு அக்கட்சியினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவினர் அவரவர் இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
* பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா, சுருக்க முறை தேர்வு நடத்தலாமா என்று சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய கல்வி வாரியங்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன.கொரோனா பரவலால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. அவற்றை நடத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
* சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அரிசி, பருப்பு, எண்ணெய் கிடங்குகளிலிருந்து வாகனங்களை மொத்த வியாபார சந்தைகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவல் காரணமாக, உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால், வீடுகளில் தனியாக இருப்பவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாகக் கூறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஜூன் 7ஆம் தேதி வரை உணவங்களை மூட ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவெடுத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்