இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்து அணியுடன் பயணிப்பதால் அவருக்கு மாற்றாக ராகுல் டிராவிட் செயல்படுவார் என தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 2ஆம் தேதி அன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளது. இந்த சுற்றுபயணத்தில் நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த தொடரில் டெஸ்ட் அணியின் பிரதான வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஜடேஜா என அனைவரும் இங்கிலாந்து பயணத்தில் விளையாடுகின்றனர். அதனால் இலங்கை தொடரில் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இந்தியாவுக்காக களம் இறங்க உள்ளனர். முழுவதும் இந்த அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த அணியை டிராவிட் வழிநடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக இந்திய ஜூனியர் அணியை அவர் பயிற்சியாளராக வழிநடத்தி உள்ளார். 2014இல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பேட்டிங் ஆலோசகராக இருந்தார் டிராவிட். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக உள்ளார் அவர். ஜூலை 13 முதல் ஜூலை 27 வரை இந்திய அணி இலங்கையில் விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்