Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மக்களை கெஞ்சி கேட்கிறேன்; முழு ஊரடங்கை முறையாக பின்பற்றுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க காரணம் மக்களின் வெளிநடமாட்டம்தான். ஊரடங்கு கசப்பு மருந்துதான், அதை மக்கள் அருந்திதான் ஆகவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ செய்தியில், “தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரங்கள்தான் ஆகின்றது. இந்த இரண்டு வாரத்தில் கொரோனா நிவாரண உதவியாக முதல் தவணை இரண்டாயிரம், ஆவின்பால் 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

கடந்த இரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 17 ஆயிரம் புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை, 30 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. தினமும் 1.07 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, புதிதாக 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 6000 செவிலியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாகவே மாற்றி வருகிறோம்.

கொரோனாவை கட்டுப்படுத்த  மே10 முதல் 24 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் கொரோனா ஓரளவுதான் கட்டுக்குள் வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க தளர்வுகளற்ற ஊரடங்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி 35 ஆயிரத்தை கடந்து பீதியூட்டுகிறது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க காரணம் மக்களின் வெளிநடமாட்டம்தான். எனவே இப்போதைய ஒரே தேவை அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கு கசப்பு மருந்துதான், அதை மக்கள் அருந்திதான் ஆகவேண்டும்.

இந்த முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றினால் கொரோனா சங்கிலியை முற்றிலுமாக ஒழித்திடலாம், எனவே நாட்டு மக்கள் அனைவரையும் கெஞ்சி கேட்கிறேன். அனைவரும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே இருங்கள். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்