Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கருப்பு பூஞ்சை மருந்து முதல் கொரோனா நிவாரணம் வரை: ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் என்னென்ன?

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆம்போடெரிசின் மருந்துக்கும் வரிவிலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு
செய்துள்ளது. கோவிட் சிகிச்சைக்கு பயன்படுத்த இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கோ அல்லது தன்னார்வ அமைப்புகளுக்கோ நன்கொடையாக அளிக்க இந்த பொருட்கள் வணிக முறையில்
இறக்குமதி செய்யப்பட்டாலும், வரிவிலக்கு கிட்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு அறிவித்தார்.

image

மேலும் அவர், 'உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கோவிட் தடுப்பூசி மற்றும் கோவிட் சிகிச்சை மருந்துகள், கருவிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பரிசீலனை செய்ய அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த அமைச்சர்கள் குழு விரைவிலேயே தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்' என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக அளிக்கப்படும் கோவிட் நிவாரண பொருட்களுக்கும் இறக்குமதி வரிகள் இருந்து விலக்கு ஏற்கெனவே அமலில் உள்ளது. அதேபோல வணிக ரீதியாக இறக்குமதி செய்யப்படும் கோவிட் சிகிச்சை பொருட்களுக்கும் வரி விதிப்பது தொடர்பான வழக்கிலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஜிஎஸ்டி வரி வசூல் தற்போது நடைமுறையில் இல்லை.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் விலக்கு பட்டியலில் சேர்க்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதால் அது இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. கோவிட் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி, இந்த கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. மாநில நிதி அமைச்சர்கள் காலை 11 மணி தொடங்கி, கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆலோசனைகளில் ஈடுபட்டார்கள். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நஷ்டஈடு வழங்க நிதி இல்லாததால் சென்ற ஆண்டை போலவே கூடுதல் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகை கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் என வலியுறுத்தி, மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

image

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை விளக்கினார்கள். இந்த வருடம் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமாகும் என்பதால் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க ஜிஎஸ்டி வரி தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய கூடுதல் நேரம் ஒதுக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்தது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொழில்நிறுவன அமைப்புகள் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகள் தொடர்பான சலுகைகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

- கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்