தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி – மருத்துவ ஆக்சிஜன் - கொரோனா மருந்துகள் போன்றவற்றின் உற்பத்தி தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 18 – 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறை அமல்படுத்திய பின்னரும்கூட, தமிழகத்தில் பரவலாக அது அமலுக்கு வராமலேயே இருக்கிறது. காரணம், தடுப்பூசிக்கான தட்டுப்பாடு. இதை போக்க, கடந்த வாரம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் மாநில உரிமையைக் கொண்டு தடுப்பூசி கொள்முதல் செய்யலாம் என முடிவெடுத்தது தமிழக அரசு.
இதன்படி தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மூலம், 5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்தது.
இதற்கு அடுத்தகட்டமாக, தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி விநியோகம் மட்டுமன்றி, ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ உயிர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா தொடர்பான மருந்துகள் போன்றவற்றின் உற்பத்திகளும் தமிழகத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தி, ஆக்சிஜன் உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றை இப்படி உள்மாநிலத்தில் ஏற்படுத்தி அவற்றை அதிகரிப்பதென்பது, தமிழகத்தில் கொரோனாவை தடுக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்