கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் ஆன்லைனிலோ அல்லது சமூகவலைதளங்கள் மூலமோ வாங்க முயல வேண்டாம் என்று சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளில் ஒன்றாக ரெம்டெசிவிரை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். இம்மருந்துக்கு முன்பு இருந்த அளவுக்கு பற்றாக்குறை இல்லை என்றபோதிலும், ஆன்லைன் மூலமும் போலியான வலைதளங்களிலும் பணம் செலுத்தி ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதுதொடர்பாக சென்னையில், கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14 வழக்குகள் பதிவாகின. ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கி பதுக்கியதாகவும், அதிக விலைக்கு விற்றதாகவும் 34 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் மருந்து நிறுவன உரிமையாளர் புவனேஸ்வர், அவருக்கு ரெம்டெசிவிரை சப்ளை செய்த கொண்டித்தோப்பு நவ்கர் நிறுவன உரிமையாளர் நிஷித் பண்டாரி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரெம்டெசிவிர் தவிர வேறுசில மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் விற்பனை குறித்தும் இணையதளம் மூலம் மோசடிகள் நடப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் குவிகின்றன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். யாரும் இணையதள விளம்பரங்கள், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதாக எண்ணி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு ஏமாந்தவர்கள் சைபர் குற்றப்பிரிவில் 24 மணி நேரத்துக்குள் புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை மீட்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்