தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. ஆனாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாதது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமானதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கிற்கு பின்னர் வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்து 513ஆக பதிவாகி உள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 910 சிறார்கள் ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள். சிகிச்சையில் இருந்தவர்களில் 31 ஆயிரத்து 673 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து 490 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 131 ஆக குறைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2 ஆயிரத்து 467 பேரும், ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 653 பேரும், திருப்பூர் ஆயிரத்து 338 பேரும், சேலத்தில் ஆயிரத்து 140 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10ஆவது நாளாக குறைந்துள்ளது. தொற்று குறைவு ஆறுதல் அளித்தாலும், ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்