மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நாற்காலி கடைசிவரை அவருக்கு முள் இருக்கையாகவே இருந்தது. ஆயினும், தனது அசாத்திய திறமையால் தனித்துவமான பிரதமராக விளங்கினார். அவர் குறித்த நினைவுகூரல் இங்கே...
1991-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு, ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்து போனது. காங்கிரஸ் கட்சியும் அதே நிலைமையில்தான் இருந்தது. தங்களது தலைவரை இழந்துவிட்ட நிலையில், அடுத்தது என்ன செய்யப் போகிறோம் என அனைவரும் விழிபிதுங்கி நின்றபோது, நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு பெயர் பரிசீலனையில் அர்ஜுன் சிங், சரத் பவார், என்.டி.திவாரி, நரசிம்ம ராவ் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நரசிம்ம ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில மாதங்கள் கூட இந்த ஆட்சி தாக்குப் பிடிக்க முடியாது என சொல்லப்பட்ட நிலையில், ஜூலை 15, 1996-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை வெற்றிகரமாக தொடர்ந்தார்.
'ராஜீவ் காந்தி என்ற மிகப்பெரிய பிம்பத்தின் பிரதிபலிப்பை கொடுக்க வேண்டும்; அவர் தொடங்கிவைத்த புதிய பொருளாதார சீர்திருத்தங்களை தொடர வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு சுமைகளுக்கு மத்தியில்தான் நரசிம்ம ராவ் ஆட்சியை நடத்தினார். பிரதமர் நாற்காலி கடைசிவரை அவருக்கு முள் இருக்கையாகவே இருந்தது.
1921-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பிறந்த நரசிம்ம ராவ், மிகத் தீவிர படிப்பாளி. உஸ்மானியா பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகங்களில் பல துறைகளில் பட்டம் பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞரும் கூட. பொதுவாக 'சிரிக்காத பிரதமர்' என அறியப்படும் நரசிம்ம ராவின் நாடாளுமன்ற உரைகள் தனித்துவமானது.
1971 முதல் 1973 வரை ஆந்திர மாநில முதல்வர் பதவி, அனைத்திந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர் பதவி, 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆந்திர சட்டமன்ற பதவி, அதன்பிறகு நாடாளுமன்ற பதவி, 1980-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி, அதன்பிறகு உள்துறை அமைச்சர் பதவி, பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி; கூடுதலாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் என பல பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்ததால் ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி... வந்த சிக்கல்கள் அத்தனையும் சுலபமாக சிக்சர்களாக மாற்றி இந்தியாவின் தனித்துவமான பிரதமர்களில் ஒருவராக இன்றும் அறியப்பட கூடியவராக நரசிம்ம ராவ் இருக்கிறார்.
சிறந்த கவிஞர் மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்ட நரசிம்ம ராவ் தெலுங்கு, மராத்தி கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் கவிதைகள், சிறுகதைகள் எழுதும் அளவிற்கு புலமை பெற்றவர். இவை தவிர 17 மொழிகளில் பேசக்கூடிய வல்லமை பெற்றவர்.
நரசிம்ம ராவ் பாலஸ்தீன் விவகாரத்தை கையாண்டது மற்றும் வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்றபோது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியது என பல அதிரடி நடவடிக்கைகளால் உலக அளவிலும் பரபரப்பான தலைவராகவே நரசிம்ம ராவ் இருந்தார்.
1991-ஆம் ஆண்டு அப்போதைய காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் இருந்தது, 1992ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு என பல்வேறு சிக்கல்களையும் இவரது ஆட்சி சந்தித்திருந்தாலும் பாராட்டவும் அல்லது விமர்சிக்கவும் எப்போதும் தேவைப்படும் இந்தியாவின் தவிர்க்க முடியாத பிரதமர்களில் ஒருவராக இன்றும் நரசிம்ம ராவ் அறியப்படுகிறார்.
- நிரஞ்சன் குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்