நெய் இட்லி, மிளகாய்ப்பொடி இட்லி, ஆனியன் கேரட் ஊத்தப்பம், இடியாப்பம், இவற்றுடன் தொட்டுக்கொள்ள சொதி குழம்பும் - சப்பாத்தி அடை அவியலும் என இருபதுக்கும் மேற்பட்ட அறுசுவை உணவுகளை தயாரித்து, உணவின்றி தவிக்கும் எளியோருக்கு நேரிலேயே சென்று அவற்றை வழங்குகின்றனர் நெல்லையைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் குழு. இவர்களின் இந்த சுவாரஸ்யமான முன்னெடுப்பு குறித்து, இங்கு காணலாம்.
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை, மிகப்பெரிய அளவில் மக்களை பாதித்து விட்டது. பொருளாதார ரீதியிலான உதவிகளை எதிர்பார்த்து நிறைய குடும்பங்கள் இப்போதும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், எளியோரின் துயர் துடைக்க தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் புதிது புதிதாக இளைஞர்கள் ஒன்றிணைந்து தன்னார்வலராக மாறி உணவு, சமைத்து இயலாதவருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் வழங்கி வருகின்றனர்.
அப்படித்தான் நெல்லையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து, உணவுக்கு வழி இல்லாதவருக்கு உணவு கொடுக்கத் தொடங்கினர். ஆனால் பிறரை போல 'கிடைக்கும் உணவை கொடுப்போம்' என்றில்லாமால், அறுசுவை உணவாக கொடுக்க சிந்தித்து உள்ளனர்.
உணவளிக்க தொடங்கிய முதல் 10 நாட்களில் சாதாரணமாக சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் மட்டுமே கொடுத்து வந்தவர்கள், தற்போது காலையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அறுசுவை பதார்த்தங்களுடன் உணவு கொடுக்கின்றனர். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக, 20 வகைக்கும் மேற்பட்ட அறுசுவை உணவை அளித்துவருகிறார்கள் அவர்கள். உணவை சமைம்மபதோடு மட்டுமன்றி, மக்களுக்கு நேரில் சென்று கொடுக்கவும் செய்கிறார்கள் இவர்கள்.
நெல்லையின் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோயில் முன்பாக 150 பேருக்கு அறுசுவை உணவுகளை இன்று நேரில் வழங்கியுள்ளர். 'உணவுக்கு வழி இல்லாத இயலாத மக்களுக்கும் ஆசைப்பட்ட அனைத்து உணவுகளும் கிடைக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் இதை செய்வதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் அறுசுவை உணவுகளின் பட்டியல் படி நெய் இட்லி, மிளகாய் பொடி இட்லி, சட்னி, சாம்பார், சப்பாத்தி, ஸ்பெஷல் பால் வெஜ் குருமா,
பால் கொழுக்கட்டை, குலோப் ஜாமுன், சிப்ஸ், சேலட், தயிர் வடை, இடியாப்பம், சொதி குழம்பு, கடலை மிட்டாய், பொரி உருண்டை, பழங்கள், கொழுக்கட்டை, ஆனியன் கேரட் ஊத்தப்பம், அடை அவியல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அறுசுவை பதார்த்தங்கள் உள்ளன.
அனைத்தும் தினமும் ஏழை எளிய மக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படுகிறது. "ஏழை மக்கள் விரும்பும் உணவை வழங்கி அவர்களுக்கு வழங்கும் கனவை நாங்கள் உறுதியாகி வருகிறோம்" என மகிழ்ச்சியாக சொல்கின்றனர் நெல்லையைச் சேர்ந்த இந்த தன்னார்வலர்கள்.
- நாகராஜன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்