கொரோனா பாதித்தவர்களை, அதிலிருந்து மீளும் வரையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் மாநகராட்சிப் பணியாளர்கள். குறிப்பாக, சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்களின் தொடர் கண்காணிப்பு காரணமாக, ஒரு குடும்பமே கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது.
உதவும் உள்ளத்துடன் பேசும் சரண்யா, மாதாவரம் மண்டலத்தில் முன்களப்பணியாளராக இருப்பவர். வேகாத வெயில் நேரத்தில் எதையும் பொருட்படுத்தாமல், ஒருநாளைக்கு 300 வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபடுகிறார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை தேடிச்சென்று அங்கு பாசிட்டிவ்வாக இருப்பவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதிப்பது, தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்வது என பணியாற்றுகிறார் சரண்யா.
இதுவரை 20-க்கும் அதிகமானோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி உயிர்காத்திருக்கிறார் சரண்யா. அவர்களில் ஒன்றுதான் சுரேஷின் குடும்பம். முதல் 7 நாட்கள் வரை சாதாரணமாக இருந்தவருக்கு 8-ஆம் நாளில் ஆக்சிஜன் அளவு சரிந்ததை கண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார் சரண்யா.
குடும்பத்தில் 4 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு துவண்டிருந்த நேரத்தில் அனைத்து தேவைகளுக்கும் உதவியாக இருந்த மாநகராட்சி ஊழியர்களின் சேவையால் சுரேஷின் குடும்பமே நோயிலிருந்து மீண்டிருக்கிறது.
இவரைப்போல இந்தப் பகுதியில் உள்ள கொரோனா பாதித்த 300 குடும்பங்களை நேரில் சந்திப்பதும், அவர்களின் உடல்நிலையை கண்காணித்து பதிவு செய்வதுமாக இன்முகத்துடன் பணியாற்றுகிறார் சரண்யா.
போற்றுதலுக்குரிய சரண்யா போன்ற முன்களப்பணியாளர்களின் சேவையும், தைரியமூட்டும் வார்த்தைகளும், துரித மருத்துவ உதவிகளும் எண்ணற்ற கொரோனா நோயாளிகளை நோயிலிருந்து மீட்டுவந்திருப்பது இவர்களின் அன்பான புன்னகைகளில் வெளிப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்