Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன்முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின், 2 அதிகாரிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில், 5 அதிகாரிகளிடமும் 2 பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையை பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார். தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன்விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வார அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புலன் விசாரணை அதிகாரி கேட்டுக் கொண்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு, தனது அறிக்கையை ஏற்கெனவே உள்துறை செயலாளரிடம் சமர்பித்து விட்டதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்