சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக மாணவர்கள் இனி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தகங்களை பாடமாக படிக்க இருக்கிறார்கள்!
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்பாராத சம்பவம் சில தினங்கள் முன் நிகழ்ந்துள்ளது. அதாவது, பல்கலைக்கழகத்தில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், யுஜிசி ஒரு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தங்கங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன. யோகி ஆதித்யநாத்தின் 'ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா' மற்றும் ராம்தேவின் 'யோக சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா' ஆகிய புத்தகத்தின் பகுதிகள் முதல் ஆண்டு, இரண்டாம் செமஸ்டர் இளங்கலை தத்துவ பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இது மற்ற படிப்புகளுடன் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாகவும் எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழக சார்பு துணைவேந்தர் பேராசிரியர் ஒய்.விமலா கூறுகையில், ``யோகி ஆதித்யநாத் மற்றும் ராம்தேவ் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தத்துவம் குறித்த ஆய்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இரண்டு புத்தகங்களையும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது மற்றும் பல்கலைக்கழக ஆய்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசிடமிருந்து பரிந்துரை பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு (யுஜிசி) வழங்கப்பட்டது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் கீழ், யுஜிசி ஒரு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பாடத்திட்டத்தின் படிப்பு மற்றும் பயிற்சி ஒரு மன அழுத்தமற்ற மற்றும் சிரமமில்லாத வாழ்க்கை, நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை வழங்கும் என்று மாநில அரசு பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்த தத்துவ பாடத்திற்கான பாடத்திட்ட அமைப்பு கூறியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யோகியின் படைப்புகளை மாநில அரசே பரிந்துரை செய்து தற்போது, அதனை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதனை விமர்சித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக மாணவர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்