கோவையில் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைக்காத தனியார் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (63). இவர், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் அப்பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மே 20-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் நதீமிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.16 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளனர். ஏற்கனவே, 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், காப்பீடு செய்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் நதீம் கேட்டபோது ரூ.15 லட்சம் மருத்துவனை தரப்பில் முன்னதாகவே கோரப்பட்ட தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், ரசீதுகளை வாங்கிப் பார்த்தபோது அதில் ரூ.11.55 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக தொகையை நிர்ணயித்து மோசடி செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நதீம் புகார் அளித்ததோடு, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார் தெரிவித்தார். இந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல், வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஆவணங்களை அளிக்காததால் கொரோனா சிகிச்சை அளிக்கும் அனுமதியை மாவட்ட சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. அந்த மருத்துவமனையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யவும், விசாரணை முடியும் வரை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்