மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு அமைப்பது மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்குவது தொடர்பாக மதுரைக்கிளையில் மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது. இதில், 2018 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான "ப்ராஜெக்ட் செல்"லை உருவாக்கி அதில் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர், நிர்வாக அதிகாரி உட்பட பலரை நியமனம் செய்து தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், நிர்வாக இயக்குனர் போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தரப்பில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்குவதற்காக கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான தற்காலிக இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தால் உடனடியாக தொடங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் மத்திய அரசு சார்பாக வெளிப் புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான திட்ட வரைவு எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்த நீதிபதிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்குவதற்காக தற்காலிக இடம் தேர்வு செய்வது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்