"நான் கற்ற சிலம்பாட்ட கலையை கட்டணமின்றியே கிராமத்து இளம் பெண்களுக்கு தற்காப்புக் கலையாக பயிற்சி அளிக்க விரும்புகிறேன்" என்கிறார் தனது மணநாளன்று சிலம்பு சுற்றி சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்த இளம்பெண் நிஷா.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள திருக்கோளூர் அடுத்த தேமாங்குளம் கிராமத்தில் வசிப்பவர் மோசஸ், கன்னிமரியாள் தம்பதியரின் மகன் ராஜ்குமார். ஐடிஐ வரை படித்துள்ள ராஜ்குமார் தற்போது சொந்த வயலில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது உறவுப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமண நாளன்று திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணான நிஷா, தான் கற்ற சிலம்பத்தை மணக்கோலத்திலேயே சுற்றிக் காண்பித்தார். திருமணத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அனைவரும் இதனை ஆர்வத்தோடு ரசித்தார்கள். இந்தக் காட்சி செல்போனில் எடுக்கப்பட, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழ்க் கலாசார அடையாளமான சிலம்பம் தற்காப்புக் கலையாகவும் திகழ்கிறது. அந்தக் கலையை தனது திருமண நாளன்று திருமணக் கோலத்தில் அவர் செய்திருந்தது கவனம் ஈர்த்தது. கடந்த திங்கட்கிழமை திருக்கோளூர் சமுதாய நலகூடத்தில் காலை 9 மணியிலிருந்து 10.30-க்குள் ஊர் மக்கள், உறவினர்கள் கூடி இருக்க ராஜகுமார் - நிஷா திருமணம் நடந்தது. திருமண நிகழ்விற்கு மணப்பெண்ணுடன் சிலம்பம் கற்கும் தோழிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் ஆசான் மாரியப்பன் ஆகியோர் வந்திருந்தனர். கூடியிருந்த மக்கள் முன்னிலையில் திருமண நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சிலம்பாட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். கூடவே, சுருள்வாளை சுழற்றி மிரட்டினார். மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
"பெண்கள், சிறாருக்கு கட்டணமின்றி கற்றுத் தருவேன்!" - மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றி வியக்க வைத்த நிஷாhttps://t.co/2pYpttjWeG pic.twitter.com/mKFM9m7aHV
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 30, 2021
யாரும் எதிர்பாராத விதமாக கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதுமணப் பெண் களரியை எடுத்து அனைவர் முன்னிலையில் சுற்றிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சிலம்பெடுத்து தான் கற்ற வித்தையை மணக்கோலத்துடன் சுற்றிக் காண்பித்தார் நிஷா. சிலம்பு சுற்றிய வேகம் கண்டு புதுமாப்பிள்ளை தொடங்கி சுற்றி இருந்த அனைவருமே வியந்து ரசித்து பார்த்தனர். சண்ட மேளம், விசில் சத்தம் முழங்க மணமகள், சிலம்பத்துடன் சுருள்வாளை சுழற்றியது மொபைல் போன் வழியாக உலகெங்கும் தற்போது சுற்றி வருகிறது.
மனைவி நிஷா சிலம்பு சுற்றிய நிகழ்வு குறித்து நம்மிடம் கணவர் ராஜகுமார் கூறும்போது, "எங்கள் ஊரில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே உடற்பயிற்சி - விளையாட்டு சார்ந்த அதிக ஆர்வம் கொண்டவர்கள். கபடி விளையாட்டு எங்களூரில் மிகவும் சிறப்பானது. ஆனால் எங்கள் ஊரில் சிலம்பம் போன்ற பயிற்சி இல்லை. பெண்களுக்கு தைரியம் கொடுக்க கூடிய இந்த பயிற்சிகள் எங்கள் கிராமத்தில் அனைவரும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். எனது மனைவிக்கு சிலம்பம் தெரியும் என்பதால் திருமண நிகழ்வில் சுற்ற சொன்னேன். நான் கேட்டவுடன் மனைவி தயங்காமல் சிலம்பம் மற்றும் களரியை சுற்ற ஆரம்பித்தார். நூறு பேர் முன்னிலையில் பயமின்றி சிலம்பம் சுற்றியது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது" என்றார் பூரிப்புடன்.
இதனைத் தொடர்ந்து சிலம்பம் ஆடிய புதுமணப் பெண் நிஷா கூறும்போது, "எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள திருவனந்தபுரம். கடந்த மூன்று வருடமாக நான் சிலம்பம், சுருள்வாள், பறை, ஒயிலாட்டம், கற்று வருகிறேன். திருமண நாளன்று சிலம்பு கற்றுத்தந்த ஆசானும், என் தோழிகளும், என் கணவரும் கேட்டுக் கொண்டதால் சிலம்பம் சுற்றினேன். இலவசமாக கற்றுக்கொண்ட இந்தக் கலையை கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இனி இலவசமாக கற்றுக் கொடுக்க உள்ளேன். சிலம்பம் கற்பதன் மூலம் தன்னம்பிக்கையும் தைரியமும் வளரும்" என்றார்.
- நாகராஜன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்