Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவின் ஜூன் மாத கொரோனா தடுப்பூசி திட்டம்... முழு பார்வை

'ஜூன் மாதத்தில், சுமார் 12 கோடி தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ளூர் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்' என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனை அரசு எப்படி செய்யப்போகிறது என்பதை இங்கே விரிவாக காணலாம்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸூக்கு எதிரான போரில், மனித இனத்திடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா என உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

இந்தியாவும் இந்த பணிகளில் மிக மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. ஆனால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை, போதுமான தடுப்பூசி கையிருப்பு இல்லாமை, பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதுவரை இரண்டு டோஸ்கள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

image

கடந்த சில மாதங்களாக தடுப்பூசிகள் அதிகமாக மாநில அரசுகளால் வீணடிக்கப்பட்டும் வந்த நிலையில், தற்போது அவையாவும் மாறிவருகிறது. தடுப்பூசி வீணடிப்பு குறைந்து, அதிகப்படியான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. அதிகப்படியான தடுப்பூசிகள் கேட்கப்படுவது, மிகப்பெரிய அழுத்தமாக மத்திய அரசிற்கு மாறியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி உற்பத்தியினை அதிகரிக்க, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பணிகளில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது

அதன்படி ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி திட்டத்தினை வகுத்துள்ள மத்திய அரசு, இந்த மாதம் மட்டும் சுமார் 12 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும் என சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 8 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் இதனை 12 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் சுமார் 23,35,86,960 தடுப்பூசிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு. இதில் 21,71,44,022 தடுப்பூசி டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1,64,42,938 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் 35 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது.

இந்த மாதம் மத்திய அரசு தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு 45 வயதிற்கு மேலானவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் செலுத்துவதற்காக இலவசமாக 6,09,60,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், சுமார் 5,86,10,000 டோஸ் தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேலானவர்களுக்காக மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து விலை கொடுத்து வாங்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் தடுப்பூசிகளை கையாளும் விதம், வீணடிக்கும் சதவீதம் மற்றும் தேவைப்படக்கடிய அளவு ஆகியவற்றின் அடிப்படையில்
தடுப்பூசி ஒதுக்கீடு என்பது அவ்வப்போது செய்து தரப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

image

இவ்வளவு திட்டங்கள் இருந்தாலும் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் ஆகியவை சரியான நேரத்திற்கு தடுப்பூசி உற்பத்தியினை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

இதன் காரணமாக இந்த நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிப்பு இலக்கினை மத்திய அரசை நிர்ணயித்திருக்கிறது. சீரம் நிறுவனம் தங்களது கோவிஷீல்ட் தடுப்பூசியினை 10கோடி டோஸ் தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கடந்த மே மாதம் இந்த நிறுவனம் 6.5 கோடி டோஸ் தடுப்பு ஊசியை மட்டுமே தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், செப்டம்பர் மாத இறுதிக்குள் மாதம் 10 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் அளவிற்கு பணிகள் முடுக்கி விடப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இவற்றைத் தவிர அமெரிக்காவின் அஸ்ட்ரா ஜென்கா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த தடுப்பூசிகளும் வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையில் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், நிர்ணயித்த இலக்கை விட அதிக தடுப்பு ஊசிகள் போடப்படும் என மத்திய அரசு திடமாக நம்புகிறது.

'இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும்' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்து விட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி உற்பத்தி இயக்கத்தை பொருத்தே அது சாத்தியம் ஆவதற்கான வாய்ப்புகள் தெரியவரும்.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்