Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்: பாஸ்போர்ட்டை முடக்கவும் காவல்துறை திட்டம்

தலைமறைவாக உள்ள பப்ஜி மதனின் வங்கிக் கணக்கு மற்றும் முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் காவல்துறை. மதனின் பாஸ்போர்ட்டை முடக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்தது. பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்துள்ளன. விபிஎன் சர்வரை பயன்படுத்தும் மதன், தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் செய்யும்நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்து அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30 ஆம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதனின் தந்தையான மாணிக்கத்திடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

பப்ஜி விளையாட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு பணத்தை பிட்காயினாக மாற்றி முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து மதனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து முடக்க சைபர் கிரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மதனின் நெருங்கிய நண்பரான யூ ட்யூபர் ஒருவர் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்ததையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் ஒரு குழு அங்கு முகாமிட்டுள்ளது. மதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் 18 வயதிற்கு கீழ் உள்ள மதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளனர். மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளதால் மதன் காவல்துறையிடம் சரணடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மதனை போல் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் நபர்களையும் கண்காணித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்