Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கைக்குள் உலகை அடக்கும் சமூக ஊடகங்கள்: எச்சரிக்கையாக இல்லாவிட்டால் காத்திருக்கும் ஆபத்துகள்

கிட்டத்தட்ட இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு மனதை பின்னோக்கி செலுத்துங்கள். அப்போதெல்லாம் எப்போதாவது ஒருமுறை தொலைபேசியில் அழைத்தால் மட்டுமே அல்லது நேரில் வந்தால் மட்டுமே உறவுக்காரர்கள், நண்பர்களை பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதுமாக இருந்தோம். அடுத்தமுறை அவர்களை பார்க்கும்வரை அதுபற்றியே பேசி மகிழ்ந்துகொண்டிருப்போம். ஆனால், அதுவே இப்போது? நினைத்தால் அடுத்த நொடியிலேயே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் தொடர்புகொண்டு பார்க்கிறோம், பேசுகிறோம். நம் கையிலிருக்கும் செல்போனும், சமூக ஊடகங்களும்தான் அதற்கு காரணம். கடந்த சில வருடங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் என அதீத வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்கள் நமது தொடர்பலையை விரிவுபடுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை, கல்வி என அனைத்தும் சமூக ஊடகங்களின் துணையின்றி நடப்பதில்லை என்கிற நிலை இப்போது உருவாகிவிட்டது.

அதேசமயம் சமூக ஊடகங்களில் எவ்வளவு தேவையான விஷயங்கள் இருக்கிறதோ அதே அளவில் தேவையற்றவைகளும் இருக்கத்தான் செய்கிறது. பலர் ஆதாயத்துக்காக ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி வருவது குறித்து அடிக்கடி செய்திகளும் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பலருக்கு அதை எப்படி முறையாக பயன்படுத்தவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. உதாரணத்திற்கு, எந்தவொரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும், முதலில் அதில் privacy குறித்த விளக்கம் இருக்கும். ஆனால் அதை படிக்காமலேயே ஓகே கொடுத்துவிட்டு அடுத்தகட்டத்திற்கு சென்றுவிடுவோம். ஆனால் அதிலுள்ள நன்மை தீமைகளை தெரிந்துகொள்வதில்லை.

image

சமூக ஊடகங்களின் நன்மைகளும், தீமைகளும்:

  • தகவல் தொடர்புக்கு கைகொடுக்கும் சமூக ஊடகங்களால், உறவுகளை, நட்புகளை வளர்க்கமுடிகிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் எளிதாக தொடர்புகொள்ள முடிகிறது. குறிப்பாக எந்த செலவுமின்றி பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தேடமுடியும், பேசமுடியும்.
  • உலக நடப்புகள் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் பெரிய நிறுவனங்கள் வரை சிறு, குறு தொழில் செய்பவர்கள் வரை அனைவரும் இந்த தளங்களைப் பயன்படுத்தி தங்கள் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
  • நடிப்பு, பாட்டு என எந்தவிதமான திறமைகள் இருந்தாலும், அதை யாருடைய உதவியுமின்றி நாமே சமூக ஊடகங்கள்மூலம் வெளிப்படுத்தி திறமைக்கான அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற சமூக ஊடகங்கள் வழிவகை செய்திருக்கின்றன.
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் புராஜெக்ட், ஹோம் வொர்க் மற்றும் படிப்பு சம்பந்தமான எல்லா சந்தேகங்களையும் சமூக வலைதளங்கள்மூலம் எளிதில் பரிமாறி தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
  • பொது அறிவு, சமையல், கலை, அறிவியல், மருத்துவம் என எந்தத்துறை சார்ந்த சந்தேகங்களானாலும், கேள்விகளானாலும் அதற்கு சமூக ஊடகங்களில் கண்டிப்பாக பதில் கிடைக்காமல் போகாது.
  • அதேசமயம், இதே சமூக ஊடகங்களில்தான் போலி முகவரியைப் பயன்படுத்தி பலர் மோசடி மற்றும் கொள்ளைப் போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • யார், எவரென்று உண்மையான விவரம் தெரியாமல் சமூக ஊடகங்களில் பேசி பழகி பிரச்னைகளில் மாட்டிக்கொண்ட வழக்குகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

சமூக ஊடங்கள் குறித்து நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை என்னென்ன?

உங்கள் கணக்கை Privatize செய்யுங்கள்!

பெரும்பாலான சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துக்கொள்ள தனிநபர் தனது அடிப்படை விவரங்களை குறிப்பிடவேண்டி இருக்கிறது. எனவே வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட கணக்குகளை தவிர, தனிப்பட்ட அக்கவுண்ட் வைத்திருந்தால் அதை private செய்து வைத்திருப்பதே நல்லது. இதனால் நமது நண்பர்கள் மற்றும் நம்மை பின் தொடர்பவர்கள் வேறு யாரும் நமது பதிவுகளை பார்க்கவோ, அதை பதிவிறக்கம் செய்யவோ முடியாது.

அதேபோல், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் கணக்கைத் தொடங்கும்போது அதில் அடுத்தடுத்து தனிநபர் குறித்த தகவல்கள் கேட்கப்படும். ஆனால் அனைத்துமே கட்டாயமல்ல. தேவைப்படும் இடங்களில் ’Skip' செய்துவிடலாம்.

image

என்ன போஸ்ட் செய்கிறோம்? எப்படி போஸ்ட் செய்கிறோம்?

ஒரு தனிநபர் தனது புகைப்படத்தையோ, விவரத்தையோ அல்லது தனது வேலை, தொழில் குறித்த விவரங்களையோ பதிவிடும்போது அதிலுள்ள settings-ஐ கவனிப்பது அவசியம். அதேபோல் மற்றவர்களின் போஸ்டுகளை ஷேர் செய்யும்போது அதன் நம்பகத்தன்மை மற்றும் நமது நண்பர்களை கருத்தில்கொள்வதும் அவசியம். சமூக ஊடக நண்பர்கள் பெரும்பாலும் நம்முடன் நேரில் நெருங்கி பழகுபவர்கள் இல்லை. நம்முடைய போஸ்டுகள்தான் நம்மை யார் என்பதை அடையாளப்படுத்தும். எனவே அதில் அத்தியாவசியமான மற்றும் ஸ்வாரஸ்யமான தகவல்களை பதிவிடுவது அவசியம். அதற்காக அடிக்கடி எதையாவது போஸ்ட் செய்துகொண்டே இருந்தால் அது மற்றவர்களுக்கு ஒருவித எரிச்சலை உண்டுபண்ணி விடும்.

அதேபோல், சிலர் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பர். தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் பொதுவெளியில் தெரியவேண்டிய அவசியம் இல்லை. பின்னாளில் ஏதேனும் பிரச்னை வந்தால் அதுவே நமக்கு எதிரியாக மாறிவிடும் வாய்ப்புகளும் உண்டு.

எல்லா நேரமும் பேசவேண்டிய அவசியமில்லை

எந்தவொரு ட்ரெண்டிங் என்றாலும் அதுகுறித்த தங்களது கருத்தை கண்டிப்பாக பதிவிட வேண்டும் என சிலர் நினைப்பார்கள். ஆனால், அதற்கான அவசியமில்லை. சில நேரங்களில் அமைதியாக மற்றவர்களை கருத்துகளை கவனிப்பவராகவும் இருப்பது அவசியம்.

பதில் அளிக்க தவறவேண்டாம்!

உங்களுடைய நண்பர்கள் மற்றும் ஃபாலோவர்களுக்கு பதில் அளியுங்கள். தினமும் பேச நேரம் இல்லாவிட்டாலும் உங்களுடைய போஸ்டுகள் குறித்தோ, அல்லது குறிப்பிட்ட ஒரு பிரச்னை பற்றியோ உங்களுடைய கருத்துகளை எதிர்நோக்கும்போது அவர்களின் மெசேஜ், கமெண்ட்டுகளுக்கு பதில் அளிக்க தவறவேண்டாம்.

அதிக நட்பு ஆபத்தே!

சமூக ஊடகங்களில் முகம் தெரியாத நபர்களிடம் கூட பேசிப் பழகி நண்பர்கள் ஆகமுடியும் என்பதால் சில நல்ல நண்பர்கள் கிடைத்தாலும், பல நேரங்களில் பிரச்னைக்கு வழிவகுக்கும். போலி கணக்குகள் அதிகமாகிவிட்டதால் யாருடனும் அதிக நட்புடன் பழகி உங்களுடைய விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

image

லொகேஷனை பதிவிடுவதை தவிர்க்கலாம்

சமூக ஊடகங்கள் உதவியுடன் வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இடங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றின் விவரங்களைப் பெற தனது லொகேஷனைக் கொடுத்துத் தேடுவார்கள். ஆனால், அதே லொகேஷனைப் பயன்படுத்தி நாம் எங்கு இருக்கிறோம் என்ற விவரத்தை மோசடி கும்பல்களும் பெறமுடியும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டு!

சமூக ஊடங்களை பயன்படுத்துவோர் மிகமிக கவனமாக இருக்கவேண்டியது பாஸ்வேர்டில்தான். வேறு எந்த நபருடனும், உங்களைப்போலவே பேச எளிதாக வழி சமூக ஊடகம்தான். எனவே கடவுச்சொல் கடினமானதாக இருப்பது மிகமிக அவசியம். அதை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பிஸினஸ் கணக்காக இருந்தால் இன்னும் அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

எல்லா இடங்களிலும் ஃப்ரீ வை-ஃபையை நம்பவேண்டாம்!

இலவச வைஃபை கிடைத்தால் அதை உடனே கனெக்ட் செய்து பயன்படுத்துவது பலருக்கு பழக்கம். ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் அனுமதி வழங்கலில் மாற்றம் இருக்கும். இப்படி கனெக்ட் செய்வதன்மூலம் போனிலிருக்கும் தகவல்களை எதிர்தரப்பில் இருப்பவர் எடுத்துக்கொள்ளமுடியும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்