அதிபர் கிம் ஜாங் உன்னின் எடை இழப்பு விவகாரம் வடகொரியா நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவில் நடைபெற்று வரும் ஆட்சியில் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவர் கடைசியாகப் பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்கள் வரை அவர் எவ்வித நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஜூன் 6-ஆம் தேதி முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரை கண்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் கிம் ஜாங் உன் கணிசமாகத் தனது உடல் எடையை இழந்திருந்தார். பழைய படங்களுடன் அவரது தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது தெளிவாகத் தெரிந்தது. அவரது உடல் எடை இழப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் கிம் ஜாங் உன்னின் எடை இழப்பு விவகாரம் வடகொரியா நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிபரின் எடை இழப்பு குறித்து வட கொரியாவில் உள்ள அனைவருமே மனமுடைந்து போயுள்ளதாகவும், தங்களுக்கு இது கண்ணீர் வரவழைப்பதாகவும் பியோங்யாங் நகரவாசி ஒருவர் ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்