நம் வாழும் உலகம் நமக்கானது மட்டுமல்ல ,நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் வருங்கால சந்ததிக்கானது என இயற்கை அடிக்கடி நிரூபித்து காட்டுகிறது . இதனடிப்படையில்1974 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டு ஜீன் 5 ஆம் தேதியை உலக சுற்றுசூழல் தினமாக அனுசரித்து கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு சுற்றுசூழல் மறுசீரமைப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து பள்ளி மாணவ மாணவிகள்,இளைஞர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
உலக நாடுகளில் கோவிட் 19 வைரஸ் பெருத்த சேதங்களையும் ,பல உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.மக்கள் கூட்டங்களை தவிர்ப்பதற்காக ,அரசு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது.அதன் எதிரொலியாக வாகன போக்குவரத்து எண்ணிக்கை குறைந்து காற்று மாசுபடுவது குறைந்துள்ளதாகவும் ,இக்காலகட்டத்தில் இயற்கை தன்னை புதுப்பித்து கொண்டதாகவும் ஆய்வளர்கள் தெரிவித்துள்ளனர்.இருந்த போதிலும் நிலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவு நீர், வாகன புகை, போன்றவற்றால் பல உயிர்களை நொடிக்கு நொடி இழந்து வருகிறோம்.
காடழிப்பு: நாம் சுவாசிக்கும் 20 சதவீதம் ஆக்சிஜனை அமேசான் காடுகளே உற்பத்தி செய்கிறது.இவ்வுலகத்தில் இருக்கக் கூடிய 10 சதவீத உயிரினங்கள் இக்காட்டில் வசிக்கின்றன, 10 லட்சம் பூர்வ குடி மக்களின் வாழ்வின் ஆதாரமே அமேசான் காடுகள்.அமெரிக்காவின் நிலப்பரப்பை ஒப்பிடுகையில் பாதியளவு அமேசான் காடுகளாக நிறைந்து இருக்கும். பூமியின் நுரையீரல் என்று சொல்லக்கூடிய காடுகளை இலாப நோக்கத்திற்காக பெரு நிறுவனங்களுக்கு பொல்சனாரோ அரசு அழிக்க அனுமதி வழங்கி இருக்கிறது. 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் 2020 ஆம் ஆண்டு மாதத்தில் 60 சதவீதம் கூடுதலாக காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு பனிப்பாறைகள் உருக காரணமாகிறது.
தென் இந்தியாவை பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையே மூல ஆதாரம்.பல ஆறுகள் பிறப்பிடமாகவும், உயிரினங்கள் வாழ்விடமாகவும் விளங்கி வருகிறது.ஆனால் மலைகளை குடைந்து சுரங்கம் அமைப்பதிலும் ரயில் தண்டவாளங்கள் அமைப்பதிலும்,நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதிலும் தான் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. சுற்றுசூழலை அளித்து பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வதிலே முனைப்பு காட்டுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம்: 21 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.கால நிலை மாற்றம் என்பது மாறிவரும் தட்பவெப்பநிலை, மாறிவரும் உணவுப்பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை,சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு, பருவம் மாறி பெய்யும் மழை, கடல் மட்டம் உயர்வு,கரியமில வாயு ,நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடி போன்றவையினால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மனிதனுடைய நலனும் பாதிக்கப்படுகிறது.கொரோனா காலக்கட்டத்தில் இயற்கை சிறிதளவாவது தன்னை மாற்றி கொண்டிருக்கும் வேலையில் இந்தியாவில் புண்ணிய நதியாம் கங்கை நதியில் கோவிட்-19 ல் இறந்த பிணங்கள் மிதப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.இவற்றை உடனடியாக தடுக்காவிடல் பெரிய இழப்புகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுசூழலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? சுற்றுசூழல் தினத்தின் முக்கிய நோக்கம் நமது சுற்றுபுற சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.குறிப்பாக உலக அரங்கில் பெருகி வரும் சுற்றுசூழல் மாசுக்கள்,அழிந்து வரும் கடல் உயிரினங்கள்,மக்கள் தொகை பெருக்கம்,உலக வெப்பமயமாதல்,காடுகளின் பாதுகாப்பு மற்றும் நமக்கு கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களை பாதுகாத்து சரியான வளர்ச்சி பெற வேண்டும்.
காலநிலை மாற்றம் மனிதனின இறுதிநிலையை குறிக்கும் பட்சத்தில் காடுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே புவி வெப்பமயமாதலை தடுக்க இயலும்.இன்றைய நிலைமையில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் கூட ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.அந்தளவுக்கு தட்டுப்பாடு நீடிக்க காரணம் மக்கள் மட்டுமே.கோவிட் முந்தைய காலமும் சரி,பின்னரும் சரி சரியான பாடத்தை மனிதர்களுக்கு இயற்கை கற்றுக்கொடுத்து இருக்கிறது.எனவே காலத்தின் தன்மையும்,எதிர்கால தேவையும் உணர்ந்து மரச்செடிகளை நட வேண்டும்.காடுகளை பாதுகாக்க வேண்டும். உயிர்நாடியான பல்லுயுரிகளை பாதுக்காக்க வலியுறுத்த வேண்டும்.
கட்டுரையாளர்: ஆர்.கெளசல்யா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்