கார் விபத்து விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.
'ஜாம்பி', 'துருவங்கள் பதினாறு' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் வந்த கார் கடந்த 24-ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கான பதில் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில், கடந்த 24-ஆம் தேதி மாலை யாஷிகா தனது டாடா ஹேரியர் காரை ஓட்டி வந்ததாகவும், அவருக்கு இடது பக்க இருக்கையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது தோழி பவானி என்பவரும், பின் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த சையத் மற்றும் அமீர் ஆகியோரும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு பேரும் மாமல்லபுரத்தில் இருந்து, இரவு சுமார் 11.00 மணிக்கு ஈசிஆர் சாலையில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது சூளேரிக்காடு பேருந்து நிறுத்தத்தை தாண்டியதும், கார் நிலை தடுமாறி சாலையின் இடப்பக்கத்தில் தடுப்பு மீது மோதி தலைகீழாக கவிழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டு அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காரை ஓட்டிவந்த யாஷிகா, பின் இருக்கையில் இருந்த சையத் மற்றும் அமீர் ஆகிய மூவரும் அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக யாஷிகா மட்டும் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாஷிகாவுடன் பயணம் செய்த பவானி, ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல், படுகாயம் ஏற்படுத்துதல், அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்