Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அகழ்ந்து ஆராய்வோருக்கு ஆச்சரியம் கொடுக்கும் கீழடி: வியப்பில் ஆழ்த்தும் கலைப்பொருள்கள்

பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கைதான் உலகிலேயே தொன்மையானது என உரக்கச் சொல்லி, அடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது கீழடி. தற்போது அங்கு கிடைத்து வரும் பொருள்கள், தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மதுரை அருகே வைகை நதியின் கரையோரத்தில் கீழடியில் உள்ள தென்னந்தோப்பில் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாகத் தொடங்கியது அகழ்வாராய்ச்சி. முதல் 3 கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை நடத்தியது. அடுத்தடுத்து 4, 5 மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்தி முடித்துள்ளது.

நான்காம் கட்ட அகழாய்வின் இடைக்கால அறிக்கையை 2019-ஆம் ஆண்டு வெளியிட்டது. அந்த அறிக்கை தமிழ் பிராமி எழுத்து என்பதை 'தமிழி' என உறுதி செய்தது. ஆறாம் கட்ட அகழாய்வின் முடிவில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், சுடுமண் பொருட்கள், சுடுமண் உருவங்கள், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி, செங்கல் கட்டுமானங்கள், நீர்வழிப்பாதை உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டன.

image

இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஏழாம் கட்ட அகழாய்வு கீழடியில் தொடங்கியது. இதில், குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் தொடங்கி, பண்பாடு நிறைந்த மக்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருள்களும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன.

பகடைக்காய்கள், உழவுக்கருவிகள், தமிழி எழுத்து பொறித்த மண் ஓடுகள், கயிறு வடிவ வரிகள் கொண்ட அலங்காரத்துடன் 3 உறை கிணறுகள் என நீள்கிறது அந்தப்பட்டியல். வேலைப்பாடுகள் கொண்ட உறை கிணறுகள் கிடைப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. ஆபரணங்கள் அணிந்த பெண்ணின் முகம் கொண்ட சுடுமண் பொம்மை ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

தோண்டத் தோண்ட கிடைத்து வரும் தொன்மையான பொருட்கள் அனைத்தும், பழந்தமிழர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாகவும், இரும்பை உருக்கும் நுட்பத்துடன் தொழிற்கூடங்கள் வைத்திருந்தவர்கள் என்றும் உணர்த்தி வருகின்றன. மண்பானையைக் கூட நேர்த்தியான நுட்பமான அலங்காரத்துடன் செய்துள்ளனர் பழந்தமிழர்கள்.

கீழடியில் கிடைக்கும் எழுத்துகள் அசோகர் காலத்திற்கு முற்பட்ட தமிழ் எழுத்துகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். மண் கலன்களில் 56 வகை கையெழுத்துகள் கிடைத்துள்ளன. உறைகிணறு கிடைத்த இடத்தின் அருகே மிக நீளமான செங்கல் சுவர் வெளிப்பட்டுள்ளது. பிரவாகம்போல பெருக்கெடுக்கும் இந்த ஆதாரங்கள் தமிழர்களின் மேம்பட்ட நாகரிகத்தை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகின்றனர் அவர்கள்.

அகழ்ந்து ஆராயும் அனைவருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்து வருகிறது கீழடி. இதுவரை எந்த அகழாய்விலும் கிடைக்கப்பெறாத அரிய ஆவணங்களை அடுத்தடுத்து அள்ளித் தருகிறது. உலக அரங்கில் தமிழர்களின் மாண்பை மேலும் மேலும் உயர்த்திடுவதற்கான சான்றுகளே அவை.

-கணேஷ்குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்