வடசென்னையின் பாரம்பரிய குத்துச்சண்டை வரலாற்றை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். இப்பரம்பரையினர் பேசும் குத்துச்சண்டை வரலாறு இதோ...
உடலை வருத்தி உழைப்போர் அதிகமுள்ள வடசென்னை, உடல் வலு சார்ந்த பல்வேறு போட்டிகளுக்கும் களமாக இருந்திருக்கிறது. அந்த வகையில், சுதந்திரத்துக்கு முன்பே தமிழ் குத்துச்சண்டை வீரர்கள் உருவான இடமாக ராயபுரம் பனைமர தொட்டி இருந்திருக்கிறது.
ஆங்கிலேயர் மட்டுமே கலந்துகொண்ட போட்டியில், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களும் பங்கேற்று வெற்றியும் பெற்றனர். பின்னர் துறைமுகம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை என பல பகுதியில் பரம்பரை குத்துச்சண்டை போட்டிகளாகவும், வணிக ரீதியான போட்டிகளாவும் இது உருமாறியது. சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த தென் இந்தியாவின் முதல் குத்துச்சண்டை வீரர் கித்தேரி முத்து, பல வீரர்களை உருவாக்கியிருக்கிறார்.
சுதந்திரத்துக்கு பின்பு இடியாப்ப நாயக்கன் பரம்பரை, சார்பட்டா பரம்பரை, எல்லப்ப செட்டியார் என பரம்பரை போட்டிகள் நடந்து இருக்கிறது. சென்னையில் பலரும் ரசிக்கும் குத்துச்சண்டை போட்டியை பார்க்க உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி 1980 ல் சென்னை வந்தபோது காட்சிப்போட்டியிலும் பங்கேற்றார்.
சென்னை வந்த முகமது அலியை அப்போது வரவேற்றவர் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர். இப்படி பல வீரர்கள், வீராங்கனைகளும் உருவாகிய இடத்தில் இன்றும் சார்பட்டா பரம்பரை வாரிசுகள் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர்.
முதலில் எம்.கே.எம் பாக்சிங் கிளப்பாக உருவாகி, இன்று சென்னை முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கிளப்களை பரம்பரை வீரர்கள் வைத்திருக்கின்றனர். பலர் ரயில்வே பணியில் இருக்கின்றனர். குத்துச்சண்டை போட்டியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 1990 க்கு பிறகு போட்டிகள் நிறுத்தப்பட்ட பின்னர் பல வீரர்கள் அடையாளம் தெரியாமல் போன நிலை இருக்கிறது. எனினும் தேசிய அளவில் பல வீரர்களை உருவாக்கிய இந்த கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வடசென்னை குத்துச்சண்டை வீரர்கள் வலியுறுத்துகிறார்கள்.
- ராஜ்குமார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்